கூவாகம்
கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டதால் திருநங்கைகள் மிகவும் எளிமையாகக் கொண்டாடினர்.
மகாபாரதக் கதையின்படி பாண்டவர்கள் தங்கள் வெற்றிக்காக அரவானைப் பலி கொடுத்தனர். அரவான் தனது கடைசி விருப்பமாக தனக்குத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தான். இதையொட்டி கிருஷ்ணர் பெண் வேடம் பூண்டு அவனை திருமணம் செய்து அடுத்த நாள் அவனைப் பலி கொடுத்ததும் தாலியை அறுத்து விதவைக் கோலத்தில் புலம்பியதாக இதிகாசம் சொல்கிறது.
இதையொட்டி உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கையர் ஒன்று கூடித் தேர்த் திருவிழா நடத்துவது வழக்கம். தங்களைக் கிருஷ்ணரின் அம்சமாகக் கருதி அன்று தாலி கட்டிக் கொண்டு குதூகலமாகத் திருநங்கையர் பொழுதைக் கழிப்பார்கள். தேரோட்டம் முடிந்ததும் அரவான் பலி கொடுக்கப்படுவார். அதன் பிறகு தாலிகளை அறுத்து ஒப்பாரி வைப்பது திருநங்கையர் வழக்கமாகும்.
கடந்த ஆண்டு கொரோனா பரவலால் இந்த தேர்த் திருவிழா ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவலால் இந்த ஆண்டும் கூத்தாண்டவர் கோவில் தேர்த் திருவிழா ரத்து செய்யப்பட்டது. பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கையர்கள் இங்கு வந்து எளிமையாக இந்த திருவிழாவைக் கொண்டாடி உள்ளனர். சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் பூட்டப்பட்ட கோவில் வாசலில் மணப்பெண் அலங்காரத்தில் தேங்காய் உடைத்து விட்டுச் சென்றுள்ளனர்.