திருவனந்தபுரம்

கேரளாவில் உள் மாநில உற்பத்தி 2017-18 ஆம் ஆண்டில் 7.18% ஆக உயர்ந்துள்ளது.

நிதி அயோக் நாடெங்கும் உள்ள ஒவ்வொரு மாநிலங்களின் உள்நாட்டு உற்பத்தி குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் உள்நாட்டு உற்பத்தி மட்டுமின்றி மாநில மக்களின் வாழ்வாதாரம், பொருளாதார முன்னேற்றம் ஆகியவைகளும் கணக்கெடுக்கப் படுகின்றன. 2017-18 ஆம் வருடத்துக்கான கேரள மாநிலம் குறித்த அறிக்கையை நிதி அயோக் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “கேரள மாநிலத்தில் உள்மாநில உற்பத்தி உயர்ந்துள்ளது. கடந்த 2016-17 ஆம் வருடம் 6.22% அதிகரித்திருந்தது. தற்போது 2017-18 ஆம் வருடம் இது 7.18% ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் மனித வள மேம்பாட்டில் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் முதல் இடத்தில் உள்ளது. அத்துடன் சமூக நல திட்டங்களான சுகாதாரம், கல்வி மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றின் வெற்றிகளிலும் கேரளா முதல் இடத்தில் உள்ளது.

நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களி விட இந்த மாநிலத்தில் 60 வயதை தாண்டியவர்கள் அதிக அளவில் உள்ளனர். ஆகவே சராசரி தனி மனித வருமானம் என்பது இம்மநிலத்தில் மற்ற மாநிலங்களை விட குறைவாக உள்ளது. ஆனால் வறுமைக் கோட்டுக்கு கிழே வசிப்பவர் இல்லாத மாநிலம் என்னும் பெருமையை கேரளா பெற்றுள்ளது.

அப்படி இருப்பினும் மீனவர்கள் மற்றும் மலைவாழ் மக்களுடைய வருமானம் மற்றவர்களை விட மிகவும் குறைவாகவே உள்ளது. அரசின் வெளிப்படையான தொழில் கொள்கைகளால் இந்த மாநிலத்தில் தொழில் தொடங்க தொழிலதிபர்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவே மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு முக்கிய காரணமாகும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.