பெங்களூரு
கர்நாடகா மாநிலத்தில் சத்துணவில் முட்டை வழங்கத் தொடங்கியதையொட்டி பள்ளிகளில் 12% வரை மாணவர் வருகை அதிகரித்துள்ளது.
கடந்த டிசம்பர் 1 முதல் கர்நாடகா மாநில பள்ளிகளில் மாணவர்களுக்கு மதியம் வழங்கும் சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டம் 7 மாவட்டங்களில் தொடங்கப்பட்டது. அவை பிதார், பெல்லாரி, காலாபுராகி, கொப்பல், விஜயபுரா, ராய்ச்சூர் மற்றும் யாத்கிர் ஆகியவை ஆகும். இந்த மாவட்டங்களில் மாணவர்களின் ஊட்டச்சத்து குறைவாக உள்ளதால் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு அதற்குப் பதிலாக வாழைப்பழங்கள் வழங்கப்பட்டன. இந்த திட்டத்துக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. ஒரு சில லிங்காயத்து அமைப்புகள் பிதார் மாவட்டத்தில் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துத் திட்டத்தைத் திரும்பப் பெற அரசுக்கு மனு அளித்துள்ளன.
ஆனால் கல்வியாளர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் இந்த முடிவை மாற்ற வேண்டாம் என அரசைக் கேட்டுக் கொண்டுள்ளனர். இது குறித்து 17 அமைப்புக்கள் மற்றும் 57 தனி நபர்கள் அளித்துள்ள மனுவில் இந்த திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் விரிவாக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த திட்டத்தினால் கர்நாடகாவில் குறிப்பாக பிதார் மாவட்டத்தில் மட்டும் 12% வரை பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.