1988 ம் ஆண்டு தமிழகத்தில் தொடங்கி இன்று இந்தியா குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமன்றி நேபாள், பூட்டான் ஆகிய நாடுகளிலும் லாட்டரி உலகில் தன்னிகரில்லாமல் கொடிகட்டி பறப்பவர் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் சான்டியகோ.

மார்ட்டின் சான்டியகோ

2021 தமிழக சட்டமன்ற தேர்தல் நேரத்தில் மார்ச் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் இருதவணையாக தலா 50 கோடி ரூபாய் பாஜக-வுக்கு தேர்தல் நிதி பத்திரமாக வழங்கப்பட்டுள்ளது.

2020-21 ம் நிதியாண்டில் எந்தெந்த கட்சிக்கு யார்யாரிடம் இருந்து பணம் வந்தது என்ற விவரம் வெளியாகியுள்ளது. மொத்த தேர்தல் நிதி ரூ. 245.72 கோடியில் 209 கோடி ரூபாய் பாஜக-வுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அதில் லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான ஃப்யூச்சர் கேமிங் & ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனத்திடமிருந்து 100 கோடி ரூபாய் நிதியளிக்கப்பட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது.

7000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனங்களுக்குச் சொந்தக்காரரான மார்ட்டின் ஆளும்கட்சி எதிர்கட்சி மாநில கட்சி தேசிய கட்சி என்று அனைவருடனும் கைகோர்த்து அரசியல் உலகில் தனி செல்வாக்குடன் வலம் வருவதோடு 2015 ல் பாஜக தலைவர் ராம் மாதவ் முன்னிலையில் இவரது மகன் சார்லஸ் ஜோஸ் மார்ட்டின் பா.ஜ.க. வில் இணைந்தார்.

2011 ம் ஆண்டு சிக்கிம் லாட்டரி விவகாரத்தில் மார்ட்டின் மீது 30 க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்த சி.பி.ஐ. 2005ம் ஆண்டு முதல் கேரளாவில் போலி லாட்டரி சீட்டுகளை விற்று சிக்கிம் அரசுக்கு வரவேண்டிய ரூ 4500 கோடி ஏமாற்றியதாக போடப்பட்ட வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது.

சிபிஐ தவிர பல்வேறு மாநிலங்களில் லாட்டரி மார்ட்டின் மீது தொடரப்பட்ட வழக்குகளில் இந்தியாவின் முன்னணி வழக்கறிஞர்கள் இவர் சார்பாக வாதாடியுள்ளனர்.

2014 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

2014 பாராளுமன்ற தேர்தலின் போது நரேந்திர மோடி கலந்து கொண்ட கோவை பிரச்சாரக் கூட்டத்தில் ஐஜெகே கட்சியில் இருந்த இவரது மனைவி லீமா மார்ட்டின் கலந்து கொண்டு மேடையில் இருந்தது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

2019 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் கொல்கத்தாவில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி நடத்திய பிரம்மாணடமான பொதுக்கூட்டத்திற்கு லாட்டரி மார்ட்டின் நிதியளித்ததாகவும் கூறப்பட்டது.

அதேபோல் 2019 பாராளுமன்ற தேதர்தலின் போது திமுகவுக்கு நிதியளித்ததாக வந்த செய்தியை மறுத்த திமுக அந்த செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை மீது மான நஷ்டவழக்கு போட்டது குறிப்பிடதக்கது.