திருவனந்தபுரம்: கொரோனா தொற்றுகள் அதிகரிப்பதால் ஒரே நேரத்தில் 50000 பேருக்கு சிகிச்சை தரும் நடவடிக்கைகளில் கேரளா இறங்கி உள்ளது.
இந்தியாவில் முதல் கொரோனா தொற்று கேரளாவில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் நோயாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
ஆனால் கடந்த சில வாரங்களாக மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தினசரி 500க்கும் அதிகமாக தொற்றுகள் பதிவாகி வருகிறது. குறிப்பாக 2 மாதங்களில் மட்டும் 7000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசு தீவிரமாகி இறங்கி உள்ளது. இந் நிலையில் ஒரே நேரத்தில் 50000 நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் ஏற்பாடுகளை கேரளா செய்துள்ளது.
இது குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா கூறியதாவது: இப்போது கொரோனா சிகிச்சை மையங்கள் 56 என்ற எண்ணிக்கையில் இரட்டிப்பாக்கப்படுகிறது. அடுத்த மாதம் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் கூடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஆகையால் அதற்காக அரசாங்கம் தயாராகி வருகிறது. அதன் அடிப்படையில் கொரோனா தொற்றுகள் அதிகரிப்பதால் ஒரே நேரத்தில் 50000 பேருக்கு சிகிச்சை தரும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என்றார்.