பீஜிங்

சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஒரே வாரத்தில் மூன்றாவதாக ஒரு நகருக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக ரஷ்யாவில் கொரோனா தொற்றும், மரணங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 40,096 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,159 பேர் பலியாகி உள்ளனர். 85 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ரஷ்யாவிலிருந்து தொற்று தங்கள் நாட்டுக்குப் பரவியிருக்கலாம் எனச் சீனா அஞ்சுகிறது.  இதையொட்டி கொரோனா சோதனைகள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

சீனாவில் ஏற்கெனவே லான்ஸோ நகரம் முழு ஊரடங்கு கட்டுப்பாட்டில் உள்ளது.  இங்கு மட்டும் மக்கள் தொகை 40 லட்சம் ஆகும். அடுத்ததாக மங்கோலிய பிராந்தியத்தில் உள்ள ஏஜின் நகரும் முழு ஊரடங்கு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

இன்று சீனாவின் ஹெயிலோக்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஹெய்ஹே நகரமும் முழு ஊரடங்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நகரத்தின் மொத்த மக்கள் தொகை 60 லட்சம். ஹெயிலோக்ஜியாங் மாகாணம் ரஷ்யாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.