தைபே

தைவானின் அருகில் உள்ள சீன ராணுவ முகாமில் இருந்து இரு ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளதால் அங்குப் பதற்றம் நிலவுகிறது.

கடந்த 1940 களில் நடந்த உள்நாட்டுப் போரின் போது சீனாவும் தைவானும் பிரிக்கப்பட்டதிலிருந்து தைவான் தன்னை ஒரு சுதந்திர நாடாக அழைத்து வருகிறது.  ஆனால் சீனா அதை தனது மாகாணமாகப் பார்க்கிறது  மேலும் தேவைப்பட்டால் தைவான் வலுக்கட்டாயமாக இணைக்கப்படும் எனவும் கூறி வருகிறது. தைவான் மீது சீனாவின் தாக்குதல் அச்சுறுத்தல் பல தசாப்தங்களாக இருந்து வருகிறது.

ஒரு சில நாடுகள் மட்டுமே தைவானை அங்கீகரித்துள்ளதால் பெரும்பாலான நாடுகள் தைவானைச் சீனாவின் ஒரு பகுதியாகவே கருதுகின்றன. அமெரிக்கா தைவானுடன் அதிகாரப்பூர்வ இராஜதந்திர உறவுகளைக் கொண்டிருக்கவில்லை என்றாலும் அமெரிக்கா அதற்கு ஆயுதங்களை விற்கிறது.  அமெரிக்கா தைவானின் தற்காப்புக்கு தேவையான உதவிகளைச் செய்து தருவதாகக் கூறுகிறது.

கடந்த அக்டோபர் 2021 இல், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீனா தைவானைத் தாக்கினால், தைவானை அமெரிக்கா பாதுகாக்கும் என்று கூறினார்.  சமீபத்தில் சீனாவின் அனைத்து அச்சுறுத்தல்களையும் மீறி அமெரிக்கா சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு வந்து சென்றார். அவர் வருகையால் திகைத்துப் போன சீனா, தற்போது தைவான் மீது தாக்குதல் நடத்தலாம் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சீனா இன்று தைவானின் கடற்பகுதியில் இரு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது.  தைவானின் வட-கிழக்கு கடற்கரையில் அருகிலுள்ள சீன இராணுவ முகாமில் இருந்து இரண்டு டாங்பெங் எனப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாகத் தைவான் அரசு தெரிவித்துள்ளது.  இதனால் தைவானில் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.