டில்லி
தேசிய குடியுரிமைப் பட்டியல் குறித்து கவலை தெரிவித்த வங்க தேச பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு இந்தியப் பிரதமர் மோடி தேறுதல் கூறி உள்ளதாக வங்க தேச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
சட்டவிரோதமாகக் குடியேறி உள்ள வெளிநாட்டினரை நாட்டை விட்டு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்த்து. அதையொட்டி தேசிய குடியுரிமைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்ற மாத இறுதியில் அசாம் மாநில தேசிய குடியுரிமைப் பட்டியலின் இறுதி வடிவம் வெளியனது. இதில் சுமார் 19 லட்சம் மக்கள் விடுபட்டுள்ளனர். இந்த பட்டியலுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது
இந்த பட்டியல் நாட்டில் உள்ள சட்டவிரோதமான வங்க தேச குடிமக்களைத் திரும்ப அனுப்ப அமைக்கப்பட்டுள்ளதாக கருத்துக்கள் எழுந்தன. இந்த பட்டியல் வெளியாகும் போது வங்கதேசம் டாக்கா நகரில் இருந்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த பட்டியல் என்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் எனத் தெரிவித்தார்.
அதே நேரத்தில் அசாம் நிதி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக நுழைந்தவர்களை திரும்ப அனுப்புவது குறித்து இந்திய அரசு பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்தார். ஆனால் தேசிய குடியுரிமப்பட்டியல் குறித்து வங்க தேச பிரதமர் ஷேக் ஹசினா ஒன்றும் கூறாமல் இருந்தார்.
வங்க தேச ஊடகமான யு என் பி, “ஐநா சபை பொதுக் குழுக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட போது வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவின் தேசிய குடியுரிமைப் பட்டியல் குறித்து கவலை தெரிவித்தார். அதற்கு இந்தியப் பிரதமர் மோடி இதில் கவலையடைய ஏதும் இல்லை எனக் கூறி உள்ளார். மேலும் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள் திரும்ப அனுப்பப்பட மாட்டார்கள் என மோடி தெரிவித்துள்ளார்” எனச் செய்தி வெளியிட்டுள்ளது.