ண்டிகர்

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு தேவைப்படும் போது தனது ஆன்மாவையும் விற்பார் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கூறியுள்ளார்.

மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.  டில்லி எல்லைப்பகுதியில் பஞ்சாப் மற்றும் அரியானா மாநில விவசாயிகள் கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   இதையொட்டி டில்லியில் வெளி மாநிலப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.   விவசாயிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் மத்திய அரசு அவர்கள் கோரிக்கையை ஏற்காமல் உள்ளது.

இதையொட்டி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.  மூன்று வேளான் சட்டங்களில் ஒரு சட்டத்துக்கு டில்லி முதல்வர் ஆதரவு தெரிவிப்பதாகச் செய்திகள் வந்தன.  வேளாண் சட்டங்களைத் தீவிரமாக எதிர்த்து வரும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் இதனால் மிகவும் கோபம் அடைந்துள்ளார்.

அமரீந்தர் சிங், “மத்திய அரசின் எந்த ஒரு போலி வழக்குக்கும் அடிபணியாமல் நான் இருப்பதை ஒவ்வொரு பஞ்சாபியும் அறிவார்.  அதே நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தேவைப்படும்போது தனது ஆன்மாவையும் விற்பார் என்பதையும் நாங்கள் அறிவோம்.   இப்போது அது போல விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ஆதரித்து அவர் தனது ஆன்மாவை விற்றதை இந்த உலகமே அறிந்துள்ளது.

இவ்வாறு எதற்காக நீங்கள் செய்தீர்கள்?  மத்திய அரசு உங்களுக்கு என்ன அழுத்தத்தை அளித்தது?   அல்லது கொரோனா தாக்கத்துக்காக நீங்கள் அடுத்த முறை உதவி கோரி செல்லும் போது ஏதும் இடையூறு இருக்கக் கூடாது என்பதற்காக இவ்வாறு நீங்கள் நடந்துக் கொல்கிறீர்களா?” என டிவிட்டரில் சரமாரியாகக் கேள்விகள் கேட்டுள்ளார்.

இதற்கு டிவிட்டரில் அரவிந்த் கெஜ்ரிவால், “இந்த சட்ட மசோதாவை இயற்றிய குழுவில் நீங்களும் பங்கு அளித்துள்ளீர்கள்.  இந்த சட்டங்கள் நாட்டுக்கு நீங்கள் அளித்துள்ள பரிசுகள் ஆகும். கேப்டன் ஐயா, மற்ற தலைவர்களை இரட்டை வேடம் போடுவதாகக் கூறும் பாஜக தலைவர்கள் உங்களை மட்டும் ஏன் இதுவரை அவ்வாறு குற்றம் சாட்டவில்லை?” எனப் பதில் கேள்வி எழுப்பி உள்ளார்.