டில்லி:

டில்லி கிரிக்கெட் வாரியத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி மீது ஆம்ஆத்மி கட்சி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.

இதையடுத்து, கெஜ்ரிவால் மீது 20 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது கெஜ்ரிவால் தரப்பில் இந்த வழக்கில் மன்னிப்பு கோருவதாக மனு அளித்தனர்.

ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சஞ்சய் சிங், அஷூதோஷ் மற்றும் ராகவ் சதா ஆகியோர் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு எதிரான அவதூறு வழக்கில்  மன்னிப்புக் கோரி மனு அளித்தனர்.

அந்த மனுவில்,  அரவிந்த் கெஜ்ரிவால், “டிசம்பர் 2015 ல், டில்லி கிரிக்கெட்  அசோசியேசன் தலைவர் பதவியாக நீங்கள் இருந்தபோது முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டியிருந்தேன். இதுகுறித்த வழக்குகள் டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும், தற்போது தான் தெரிவித்த அவதூறுக்கு மன்னிப்பு கோருவதாகவும், தன்மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது அருண்ஜெட்லி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் கோர்ட்டு என்ன முடிவெடுக்கிறதோ அதற்கு தான் கட்டுப்படுவதாக தெரிவித்தார்.

டில்லி கிரிக்கெட் வாரியத்தில் மத்திய மந்திரி அருண் ஜெட்லி முறைகேட்டில் ஈடுபட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சில ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, டில்லி முதல்வர் அரவிந்த்  கெஜ்ரிவால் உள்பட 3ஆம் ஆத்மி தலைவர்கள் மீது அருண் ஜெட்லி, ரூ.20 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு வர உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு தன்மீதுள்ள அனைத்து வழக்குகளையும் முடிவுக்கு கொண்டு வர ஆம்ஆத்மி கட்சி தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி சமீபத்தில் மத்திய அமைச்சர் நீதின் கட்சியின் அவதூறு வழக்கில், அவரிடம் மன்னிப்பு கோரி வழக்கை வாபஸ் பெற்றார்.

அரவிந்த் கெஜ்ரிவால் மீது 33 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.