அன்னை தெரசாவாக ஆக நினைக்கும் கெத்ரீன் தெரசா, 5 கொலைகளை செய்யும் காட்சியை தெளிவாக காட்டும், சமூக அக்கறை கொண்ட படமாக வெளிவந்திருக்கிறது அருவம்.

படத்தின் துவக்கத்தில் ஏதோ ஒரு பேய், சிலரை தாக்குவது போலவும், கொலை செய்வது போலவும் காட்சிகள் காட்டப்படுகின்றன. அது என்ன என்பதை யூகிப்பதற்குள்ளாகவே, கெத்ரீன் தெரசாவை பள்ளி ஆசிரியராக அறிமுகப்படுத்துகிறார் இயக்குநர் சாய் ஷேகர். கிளி ஜோதிடரிமிருந்து கிளியை விடுவித்து தன்னை நல்லவராக காட்டிக்கொள்ளும் கெத்ரீன் தெரசா (ஜோதி), கடைசி காட்சியில் எப்படி மாறியிருக்கிறார் என்பதே திரையில் பார்ப்போர், நிச்சயம் ஆச்சரியத்தில் மூழ்கியே இருப்பர். கிளி ஜோதிடரிடமிருந்து கிளியை காப்பாற்றியது, மாணவர்களுடன் சகஜமாக பழகுவது போன்றவைகளால் கெத்ரீன் தெரசா மீது சித்தார்திற்கு (ஜெகன்) காதல் மலர்கிறது. தன்னை திருமணம் செய்ய விருப்பமா ? என்று சித்தார்த் கேட்க, அவரை தவிற்கிறார் கெத்ரீன் தெரசா. ஆனால் அவர் வீடு செல்வதற்கு முன்னரே, தன் நண்பர் இளங்கோ குமரவேல் உடன் பெண் கேட்க சித்தார்த் சென்றுவிடுகிறார். தன் மகளான கெத்ரீன் தெரசாவை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று தந்தை ஆடுகளம் நரேன் முயற்சிக்க, சித்தார்திடம் தனிமையில் பேசும் கெத்ரீன் தெரசா, தனக்கு நுகரும் சக்தி இல்லை என்றும், அதுவே தன் தாயை இழந்ததற்கு காரணம் என்றும் கூறி, சித்தார்த்தை அனுப்பிவிடுகிறார்.

மற்றொரு நாள் கோவிலுக்கு செல்லும் கெத்ரீன் தெரசா, தனக்கு திருமணமே ஆக கூடாது என்று வேண்டிக்கொள்ள, எதிர்பாராத விதமாக சேலையில் தீ பற்றுகிறது. தீயிலிருந்து தப்பிக்க அவர் முயற்சிக்க, அங்கு வரும் சித்தார்த், தீயை அணைப்பதோடு, தன்னால் தன்னையே பாதுகாக்க இயலாத சூழலில் கெத்ரீன் தெரசா இருப்பதை எடுத்துக் கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, வரிசையாக டீக்கடை சங்க தலைவர், அரசியல் தலைவர் என்று கொலைகள் நடந்தேறுகிறது. இதை எல்லாம் யார் செய்கிறார்கள் என்பது தெரியாமல் காவல்துறை குழம்பிப்போக, அரசியல்வாதியின் மகனான கபீர் துஹான் சிங், வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்புகிறார். கபீர் துஹான் சிங், கொலை நடந்த இடங்களை ஆய்வு செய்யும்போது, முதலில் கால் தடம் ஒன்று தென்படுகிறது. அக்கால் தடம் ஆண், பெண் என்று இரு பாலினத்தவருக்குமான கால்தடமில்லை என்று தெரியவருகிறது. அடுத்ததாக ஒரு பெண்ணின் தலை முடியை வைத்து, அது யாருடையது என்பதை உருவமாக காட்ட முடியுமா ? என்று அரசு துறையினரிடம் கேட்கிறார் கபீர். அதிகாரிகள் முடியாது என்கின்றன போது, இதற்காகவே அமெரிக்காவிலிருந்து காயத்ரி ரகுராமை வரவழைத்து, டி.என்.ஏ மூலம் உருவத்தை கண்டுபிடிக்கின்றனர். ஆதார் மூலம் அந்த உருவத்தை தேடும் போது, கொலையாளி கெத்ரீன் தெரசா தான் என்பது தெரியவருகிறது

முதல் பாதியில் கொலையாளி கெத்ரீன் தெரசா தான் என்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் பாதியை முழுக்க முழுக்க தனதாக்கிக் கொள்கிறார் சித்தார்த். கெத்ரீன் தெரசாவை அடித்து, இழுத்து வந்து கொல்ல முயற்சிக்கும் போது, கெத்ரீன் தெரசாவின் உடலில் புகுந்து அந்த கும்பலை அடித்து விரட்டுகிறார் சித்தார்த். அப்போது தான் சித்தார்த் உயிருடன் இல்லை என்பதே தெரியவருகிறது.

இது பற்றி கெத்ரீன் தெரசாவிடம், சித்தார்த் எடுத்துச் சொல்லும் தனது ப்ளாஷ் பேக் மூலம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியாக திரையில் தோன்றுகிறார் சித்தார்த். டீ, தண்ணீர், பால், நெய் பருப்பு என்கிற பெயரில் பருப்பில் நடக்கும் கலப்படம், மருத்துவமனையில் விற்கப்படும் காலாவதியான ரொட்டி என்று பல்வேறு கலப்படங்களை கண்டுபிடிக்கிறார் சித்தார்த். பொதுமக்கள் குடிக்கும் பாலை முழுக்க முழுக்க விஷமாக மாற்றியிருக்கும் கும்பலை சித்தார்த் பிடிக்கும் போது, அதன் தயாரிப்பு முறை பற்றி ஆராய்ந்து சொல்லப்படும் காட்சிகள் அதிர்ச்சியையே உண்டாக்குகிறது. தனது உயர் அதிகாரி அழைத்தார் என்று இரவு நேரத்தில் சித்தார்த் அலுவலகத்திற்கு செல்ல, எதிரிகளால் கத்தியால் குத்தப்படுகிறார். அங்கிருந்து தனது நண்பர் இளங்கோ குமரவேல் மூலம் தப்பிக்கும் சித்தார்த், யாரும் எதிர்பாராத விதமாக எதிரே வந்த ரயிலில் பாய்ந்து இறந்துவிடுகிறார்.

அதனை தொடர்ந்து, கெத்ரீன் தெரசாவின் உடலில் புகுந்து 3 பேரை கொன்றுவிட்டதாக சித்தார்த் சொல்ல, சித்தார்த் செய்தது முற்றிலும் தவறு என்றும், இனி தன்னால் சித்தார்திற்கு உதவ முடியாது என்றும் சொல்லிவிட்டு புறப்படுகிறார் கெத்ரீன் தெரசா. இது ஒருபுறம் இருக்க சித்தார்த்தை பேய் ஒட்டும் நபர் மூலம் அடக்க எதிரிகள் தரப்பு முயற்சிக்கிறது. அந்த எதிரிகளிடமிருந்து தப்பித்து, தன் காதலியான கெத்ரீன் தெரசாவுக்கு நடப்பவைகளை சித்தார்த் புரிய வைக்கிறாரா ? என்பதே மீதமுள்ள கதை.

சொல்ல வந்த விஷயத்தை உடனே சொல்லாமல், எங்கெங்கோ சென்று கடைசியாக சொல்கிறார் இயக்குநர் சாய் ஷேகர். காமெடியனாக சில காட்சிகளில் மட்டுமே வரும் சதீஷ், தனது காமெடிக்களால் ரசிகர்களை சிரிக்க வைக்கும் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது. அரசு பள்ளியின் தாளாளராக வரும் மனோபாலா, கதைக்கு ஏற்ப தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆக்ஷன் நிறைந்த கதையை, பேய் படமாக கொடுத்திருக்கிறார்கள். காதல் கதையாக ஆரம்பித்து, சமூக அக்கறையை லேசாக பரவவிட்டு, கடைசியில் பேய் பழிவாங்குவது போல டுவிஸ்ட் வைத்து, 2ம் பாகத்திற்கான ஆரம்பம் இயக்குநரால் போடப்பட்டிருக்கிறது.

படத்தில் இரண்டே பாடல்கள் தான். தமனின் இசை சுமாராகவே இருக்கிறது. அடுத்தது இது தான் நடக்கும் என்பதை யூகிக்கும் அளவுக்கு கதை இருந்தாலும், சித்தார்த் தான் அருவம் என்பதை முதல் பாதி வரை வெளிப்படுத்தாமல் இருந்தது படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. நல்ல கருத்தை கொண்ட இப்படம், திசை மாறி சென்றிருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்திருக்கிறது.