ஏ.வி.எம். ஸ்டூடியோஸ் நிறுவனர் ஏ.வி.மெய்யப்பனின் மருமகனும் ஃகியூப் டெக்னாலஜிஸ் (Qube Technologies) நிறுவனத்தின் தலைவருமான அருண் வீரப்பன் நேற்று மாலை காலமானார்.
90 வயதான அருண் வீரப்பன் வயது மூப்பின் காரணமாக மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டில் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில் நேற்று மாலை மரணமடைந்தார்.
ஏ.வி.எம். நிறுவன தயாரிப்பு நிர்வாகியாக பல்வேறு படங்களில் பணியாற்றியுள்ள இவர் ஜெமினி ஸ்டூடியோஸ் நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார்.
கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக தோன்றிய களத்தூர் கண்ணம்மா படத்தின் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய அருண் வீரப்பன் கமலஹாசனை திரையில் அறிமுகப்படுத்த முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரையரங்கில் ப்ரொஜெக்டர் மூலம் திரையிடப்பட்டு வந்த படங்களை டிஜிட்டல் முறையில் திரையிடும் தொழில்நுட்பத்தை தமிழ்நாட்டில் முதன்முறையாக கொண்டுவந்தவர் என்ற பெருமைக்கு உரியவர் அருண் வீரப்பன்.
ரியல் இமேஜ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தின் மூலம் டிஜிட்டல் முறையில் திரைப்படங்களை திரையிடுவதை அறிமுகப்படுத்தியதன் காரணமாக தயாரிப்பாளர்களுக்கு படச்சுருளுக்கான செலவு மிச்சமானது, இந்த நிறுவனம் இப்போது ஃகியூப் டெக்னாலஜிஸ் (Qube Technologies) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
தயாரிப்பு, இயக்கம், திரைப்பட தொழில்நுட்பம் என பன்முக திறன் கொண்ட அருண் வீரப்பன் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.