டெல்லி: டைனிங் ஹால் அளவுக்குகூட இல்லாத இடத்தை ஆறுமுகசாமி ஆணையத்துக்கு ஒதுக்குவதா? என வேதனை தெரிவித்த உச்சநீதி மன்றம் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மாற்று இடம் ஒதுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த கடந்த அதிமுக அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் அமைத்து விசாரித்து வந்தது. இந்த ஆணையம், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களை விசாரணைக்கு அழைத்தது. ஆனால், அப்போலோ நிர்வாகம் விசாரணைக்கு ஆஜராகாமல், உச்சநீதிமன்றத்திற்கு சென்று, தடை பெற்றது.
இதுதொடர்பான விசாரணை கடந்த 6 மாதங்களுக்கு மேல் நடைபெற்று வருகிறது. விசாரணையின்போது, ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைப் பட்சமாக நடந்துகொள்வதாக குற்றம் சாட்டியது. இதற்கு தமிழகஅரசு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணை தொடர்பான அப்பல்லோ மருத்துவமனையின் அச்சம் தேவையற்றது என்றும், ஆணையம் அதன் விதிகளுக்கு உட்பட்டே செயல்படுவதாகவும் கூறினார்.
ஆனால், ஆணையத்தில் மருத்துவ வல்லுநர் குழு இடம்பெறாததால் ஆணையத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என அப்பல்லோ தரப்பில் வாதிடப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆணைய வழக்கறிஞர், ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவ குழுவை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டால் அதற்கு ஆட்சேபம் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முன்னாள் முதல்வரின் மரணம் குறித்து விசாரணை நடத்தும் விசாரணை முன்னாள் நீதிபதி தலையிலான ஆணையம், ஒரு டைனிங் ஹால் அளவுக்கு கூட இல்லையே வேதனை யுடன் தமிழகஅரசுக்கு கேள்வி எழுப்பிய. மேலும், ஆறுமுகசாமி ஆணையத்துக்கு நவம்பர் 30-ம் தேதிக்குள் மாற்று இடத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.