சிதம்பரம்: உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா மார்கழி மாத தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது.

பிரபலமான சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா திருவிழா கொடியேற்றத்துடன் டிசம்பர் 18ந்தேதி  தொடங்கியது. நடராஜர் சன்னதிக்கு எதிர்ப்புறம் உள்ள பிரம்மாண்டமான உற்சவர் கொடி மரத்தில் உற்சவர் கொடியை உற்சவ ஆச்சாரியார் மீனாட்சி நாத தீட்சதர் ஏற்றி வைத்தார். அதைத்தொடர்ந்து, விழா நடைபெற்ற  10 நாட்களிலும் காலை, மாலை பஞ்சமூர்த்தி வீதியுலா, விசேஷ நாதஸ்வர கச்சேரி மற்றும் தேவார திருவாசக பன்னிரு திருமுறை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம்,  இன்று (26ம் தேதி) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆருத்ரா விழாவின் மார்கழி மாத தேரோட்டம் தரிசன விழா பல ஆயிரக்கணக்கான  பக்தர்கள் வடம்பிடித்து, கோஷமிட கோலாகலமாக தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

எம்பெருமான் நடராஜர், தாயார் சிவகாமசுந்தரி அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி நான்கு வீதிகள் வழியாக வலம் வந்துகொண்டிருக்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து,  விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும், தனித்தனி தேர்களில் வீதிகளில் வலம் வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்தில் குவிந்துள்ளனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து,  நாளை  27ம் தேதி ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது. அன்று அதிகாலை நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு ஆயிரங்கால் மண்டப முகப்பில், மகா அபிஷேகம் நடக்கிறது.