சென்னை: உலகிலேயே முதன்முதலில் தோன்றிய பழம்பெரும் சிவன்கோவிலான உத்திரகோச மங்கை சிவாலயம் உள்பட தமிழக சிவாலயங்களில் இன்று ஆருத்ரா விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

உலகில் உள்ள எந்த நாட்டிற்கும் இல்லாத சிறப்பு, நமது பாரத தேசத்திற்கு உண்டு. இந்தியாவை புண்ணிய பூமி, புனித பூமி, ஞான பூமி என்று எல்லோரும் அழைக்க காரணம், நம் நாட்டில்தான் பல்வேறு புண்ணிய ஷேத்திரங்களும், தீர்த்தங்களும், மூர்த்திகளும் உள்ளன. ஆதிசங்கரர், ராமானுஜர், சாய்பாபா, ரமண மகரிஷி போன்ற மகான்கள் அவதரித்த அற்புத பூமியும் இதுதான்.

அதுபோல உலகிலேயே அதிக சிவாலயங்கள் அமைந்துள்ளதும் இந்தியா. அதுவும் தமிழ்நாட்டில்தான் முக்கியமான சிவாலயங்கள் உள்ளன. அதானால்தானே தென்னாடு உடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போன்றி என வணங்கப்படுகிறது. சிவாயலங்களில் இன்று நடைபெறும் ஆருத்ரா தரிசனம் மிகவும் பிரசித்தி பெற்றது.

ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் , ஆனி மாதம் ஆனி திருமஞ்சன தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களும் சிவபெருமாள் கோவில்களில் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.  ஆருத்ரா என்பது திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும்.  மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று சிவபெருமான் களி உண்ண சென்றதாக கூறப்படுகிறது.  இன்றைய தினமே ஆருத்ரா தரிசன திருவிழா நடைபெறுகிறது. அந்த வகையில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் இன்று  நடைபெறுகிறது.

 உத்திரகோச மங்கை சிவன்கோவில்:

 உத்தரகோசமங்கையில் தான் முதன்முதலில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் சந்தன காப்பில் காட்சி தரும் சிவன், ஆருத்ரா தரிசனம் அன்று மட்டும் மரகத வடிவில் பக்தர்களுக்கு காட்சியளிப்பது குறிப்பிடதக்கது.

உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் இராமநாதபுரம் அருகே உத்திரகோசமங்கை என்னும் இடத்தில் குடிகொண்டிருக்கும்  சிவபெருமான் கோவிலாகும். சிவனின் ஸ்தலிங்களில் பிரச்சித்தி பெற்ற ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இந்த கோவிலில் நவக்கிரஹங்கள் கிடையாது. ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பது வரலாற்று அறிஞர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் உள்ள மரதத்திலான நடராஜர் சன்னதி ஆண்டுதோறும் 1 நாள் மட்டுமே திறக்கப்படும். அதாவது இன்றைய தினமான ஆருத்ரா தரிசனம் நாளன்று மட்டுமே அவர் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார்.  ந்த நிலையில் திரு உத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் இந்த ஆண்டின் ஆருத்ரா திருவிழாவானது கடந்த 28-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா தொடங்கியதில் இருந்து தினமும் சுவாமி-அம்பாள் மற்றும் நடராஜர் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.

ஆருத்ரா தரிசனத்திற்கு முதல்நாள் சந்தனக்காப்பு களையப்பட்ட மரகத நடராஜரை தரிசனம் செய்தனர்.  . இன்று காலை, நடராஜருக்கு 32 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு தரிசனம் வழங்கி வருகிறார். இன்று மாலை வரை மரகத நடராஜர் ஆசி வழங்குவார். பின்னர் இன்று இரவு, அவரது சன்னதியானது மூடப்படும். இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு ஆருத்ரா தரிசனம் அன்றுதான் திறக்கப்படும்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்:

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சூரியன் தை மாதம் முதல் ஆனிமாதம்வரை சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலத்தினை  உத்தராயண புண்ணியகாலம் என்று கூறப்படுகிறது. இந்த உத்ராயண புன்னியகால தொடக்கத்தை முன்னிட்டு இன்று அதிகாலை திருக்கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார்,  உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகஆராதனைகள் செய்து கோயில் தங்க கொடிமரத்தில்  கொடியேற்றம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில்:

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலிலும் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதை முன்னிட்டு, அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. இந்த ஆருத்ரா தரிசனத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருக்குற்றாலநாதர் கோயில்:

குற்றாலம் திருக்குற்றாலநாதர் சுவாமி கோயிலில் திருவாதிரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான  ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோயில்:

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் ஆருத்ரா அபிஷேகம் நடைபெற்றது.  இரவு 9 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரை 38 பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டு இரவு முழுவதும் கண்விழித்து சாமி தரிசனம் செய்தனர்.

பேரூர் பட்டீஸ்வரர் கோயில்

இதேபோல், மேலைச்சிதம்பரம் என்று அழைக்கப்படும் கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் கனக சபை மண்டபத்தில் எழுந்தருளிய சிவகாமி சமேத நடராஜர், ஆருத்ரா தரிசன காட்சியளித்தார்.

பெரியநாயகியம்மன் கோயில்:

பழநி கோயிலின் உபகோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை நான்கு மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு, சிவகாமி அம்பாள், நடராஜ பெருமானுக்கு சோடஷ அபிஷேகங்கள் நடைபெற்றன.