தூத்துக்குடி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தினமும் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அனுமதி அளித்தது.

இதைத் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக மூடிக் கிடந்த ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் சீரமைக்கப்பட்டு, கடந்த 12-ம் தேதி இரவு முதல் உற்பத்தி தொடங்கியது. இந்நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 6 நாட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மீண்டும் கடந்த 19-ம் தேதி திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. 19-ம் தேதி உற்பத்தியான ஆக்சிஜனில் 6.34 டன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், 5.24 டன் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் டேங்கர் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து 20-ம் தேதி காலை 7.74 டன் திரவ ஆக்சிஜன் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கும், அன்று இரவு 9 டன் மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல், 21-ம்தேதி 3.64 டன் திரவ ஆக்சிஜன் மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கும், 9.14 டன் ஆக்சிஜன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் முழு கொள்ளளவான 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.