கொழும்பு:

விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரில், அப்பாவி மக்களை கொன்று குவித்த, மனிதாபிமானமற்ற ஜெனரலை   இலங்கை ராணுவ தளபதியாக அதிபர் சிறிசேனா நியமனம் செய்துள்ளார்.

மனித உரிமை செயல்களில் ஈடுபட்ட ராணுவ கமாண்டரான சவேந்திர சில்வா  இலங்கையின் புதிய இராணுவத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

 இலங்கை ராணுவத்தின் தற்போதைய தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் செனாநாயகேயின் பதவிக் காலம் முடிவதைத் தொடர்ந்து இலங்கை ராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா (வயது 55) என்பவரை அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்.

இவர் கடந்த 2009ம் ஆண்டு, விடுதலைப்புலிகளுடன் இறுதிக்கட்டப் போர் நடந்தபோது, இறுதி கட்டங்களில் கிளர்ச்சியாளர்களின் இறுதி கோட்டையை சுற்றி வளைத்த படையினரின் பிரிவுகளில் ஒன்றான 58 வது பிரிவின் தலைமை பொறுப்பில் சவேந்திர சில்வா இருந்தார்.

இவரது படையில் இருந்த ராணுவத்தினர் அப்பாவி இலங்கை தமிழ் மக்கள் மீதும், அவர்கள் தங்கியிருந்த மருத்துவமனைகள் மீதும் தாக்குதல் நடத்தி பெருத்த சேதத்தை ஏற்படுத்தினர்.  சுமார் 45 ஆயிரம் அப்பாவி தமிழர்கள்  கொல்லப்பட்டனர். பிடிபட்ட தமிழர்களுக்கும் தேவையான உதவிகள் கிடைக்கவிடாமல் தடுத்து நிறுத்தி கொடுமைப்படுத்தியவர்.

இவர் மீது  மனித உரிமைகளை மீறியதாக ஐ.நா மனித உரிமை கவுன்சில், கடந்த 2013ம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தில், லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகளாவிய மனித உரிமைகள் சட்டங்களை மீறுவதாக உலகளாவிய உரிமைகள் குழுக்கள் குற்றம் சாட்டியுள்ளன.

சர்ச்சைக்குரிய சவேந்திர சில்வா-வை தற்போது இலங்கை ராணுவ தளைபதியாக அதிபர் சிறிசேனா நியமித்துள்ளார். இது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.