டெல்லி: குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை நாளை காலை பார்வையிடுகிறார் புதிய ராணுவ தளபதி.
நீலகிரி மாவட்டம் குன்னுார் மலை பகுதியில் டிசம்பர் 8ந்தேதி அன்று முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் பயங்கர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். விமானத்தின் குரூப் கேப்டன் வருண்சிங் என்பவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை ராணுவ தளபதி நரவனே இன்று பார்வையிடுகிறார். காலை 10.30 மணியளவில் வெலிங்டன் ராணுவ முகாமுக்கு வருபவர், அங்கு மறைந்த முப்படை தளபதி மற்றும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு விபத்து நடந்த இடத்தை பார்வையிட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.