புதுடெல்லி: ராணுவ பெண் அதிகாரியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாருக்கு உள்ளான மேஜர் ஜெனரலுக்கான பணிநீக்க தண்டனையை உறுதிசெய்தார் தலைமைத் தளபதி பிபின் ராவத்.

“மேஜர் ஜெனரல் அந்தஸ்திலான அதிகாரிக்கு வழங்கப்பட்ட தண்டனையை தலைமை தளபதி உறுதிசெய்துள்ளார். தலைமை தளபதியின் முடிவு குறித்து, தண்டனைக்குள்ளான மேஜர் ஜெனரலுக்கு 2 ராணுவ அதிகாரிகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று மூத்த ராணுவ அதிகாரிகள் கூறினர்.

மேஜர் ஜெனரலுக்கு வழங்கப்பட்ட தண்டனையை உறுதிசெய்யும் ஆவணத்தில், கடந்த ஜுலை மாதம் கையெழுத்திட்டார் தலைமை தளபதி பிபின் ராவத். பாலியல் குற்றச்சாட்டு வழக்கில், இவரை பணிநீக்கம் செய்வதற்கு ராணுவ நீதிமன்றம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.

“பதவி நீக்கத்தை உறுதிசெய்திருப்பது மற்றும் அதுதொடர்பான பிரகடனம் ஆகியவை சட்டவிரோதமானவை. ஏனெனில், ராணுவ நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்கான ஆவணங்களே அவருக்கு இன்னும் வழங்கப்படவில்லை. அவருடைய சீராய்வு மனு இன்னும் நிலுவையில் உள்ளது. இதில் ஏகப்பட்ட சட்ட முரண்பாடுகள் உள்ளது. எனவே, இந்த நடவடிக்கையை எதிர்த்து நாங்கள் போராடுவோம்” என்றார் மேஜர் ஜெனரலின் வழக்கறிஞர் அனந்த் குமார்.