திஸ்பூர்:

அஸ்ஸாம் மாநிலம் அமைதி குலைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டு அங்கு ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரிகள் வழங்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 1990ம் ஆண்டுக்கு பின் முதன்முறையாக 27 ஆண்டுகள் கழித்து இச்சட்டம் பாஜ முதல்வர் சர்பனோந்த சோனாவால் தலைமையிலான ஆட்சியில் நேற்று முதல் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின் மூலம் ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் ராணுவத்தினர் அமைதி குலைந்த பகுதிகளில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். எங்கு வேண் டுமானாலும் சோதனை நடத்தலாம். வாரன்ட் இல்லாமல் யாரை வேண்டுமானாலும் சுடலாம். இந்த உத்தரவு இடையில் திரும்ப பெறாவிட்டால் அடுத்த 6 மாத காலத்திற்கு அமலில் இருக்கும்.

கடந்த 1990ம் ஆண்டு தடை செய்யப்பட்ட உல்பா தீவிரவாத அமைப்பின் வன்முறையால் இச்சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. ப்ரபுல்லா குமார் மகந்தா தலைமையிலான ஏஜிபி அரசை கலைத்துவிட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை மத்திய அரசு தான் அமல்படுத்த வேண்டும். தற்போது மத்தியிலும், அஸ்ஸாமிலும் பாஜ ஆட்சி நடப்பதால் மாநில அரசு மூலம் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான அரசின் செய்திகுறிப்பில், ‘‘மாநிலத்தில் தற்போதைய சட்டம் ஒழுங்கு பிரச்னை கவலை அளிக்கும் வகையில் உள்ளது. பல இடங்களில் சில அமைப்புகளின் அந்தரங்க செயல்பாடுகளால் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.

மத்திய உள்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘2016ம் ஆண்டில் 75 வன்முறை சம்பவங்கள் நட ந்துள்ளது. 4 பாதுகாப்பு வீரர்கள் உள்பட 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 14 பேர் பிணை கைதிகளாக பிடித்து செல்லப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில் உல்பா மற்றும் என்டிஎப்டி உள்ளிட்ட இதர கிளர்ச்சி குழுவினர் செயல்பட்டு வருகின்றனர்’’ என்றார்.

இது தொடர்பான மத்திய அரசின் உத்தரவில் அஸ்ஸாம் எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 20 கி.மீ., அருணாச்சல் பிரதேசத்தில் திராப், சங்லாங், லாங்டிங் ஆகிய 3 மாவட்டங்கள், மேலும், 9 மாவட்டங்களில் உள்ள 14 காவல் நிலைய எல்லை பகுதிகள் அமைதி குலைந்த பகுதியாக வரும் 30ம் தேதி வரையிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.