கோவை:  கோவை பாராளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளரான அண்ணாமலை மீது, காவல்துறையினர்  4 முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு  செய்துள்ளனர்.  தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாரில் த 2 காவல்நிலையங்களில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கோவையில் அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாஜக தலைவரும் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை நேற்று  (ஏப்ரல் 15ந்தேதி) தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.  இந்த நிலையில் கோவை  காமாட்சிபுரம், இருகூர் ஆகிய இடங்களுக்கு இரவு 10 மணிக்கு மேல்  தனது பிரச்சார வாகனத்தில் வந்த அண்ணாமலை, பிரச்சாரம் மேற்கொள்ளாமல் அங்கிருந்த பொதுமக்களிடம் கை கூப்பி வணங்கி விட்டு, இருகூர் பகுதியை நோக்கி அண்ணாமலை சென்றார்.

அப்போது, அவரை கோவை மாநகர காவல் துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர் பிரச்சார வாகனத்தில் பயணம் செய்யக்கூடாது எனவும் போலீசார் கூறியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, அண்ணாமலை,  பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி அண்ணாமலை நடந்து சென்றார். அவரை தொடர்ந்து ஏராளமான பாஜக தொண்டர்களும் அமைதியாக நடந்து சென்றனர்.

இதனால் எதுவும் செய்ய முடியாமல் திகைத்த காவல்துறையினர், அண்ணாமலையை பின்தொடரும் பாஜக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து,   போலீசாருக்கும், பாஜக தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  இதை அறிந்த  அண்ணாமலை காவல்துறையினரின் செயலை கண்டித்து,  பாஜக தொண்டர்களுடன் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் போக்குவரத்து தடைபட்டது. சுமார் ஒருமணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடைபெற்றதால், வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதனால், அதிர்ச்சி அடைந்த போலீசார்  அண்ணாமலையின் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து,  மறியல் போராட்டத்தை விலக்கிக் கொண்ட அண்ணாமலை பிரச்சார வாகனத்தில் ஏறி கிளம்பிச் சென்றார்.

இதைத்தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகளின் புகாரின் பேரில் அண்ணாமலைமீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி,  போக்குவரத்திற்கு இடையூறு செய்தல்,  அனுமதி இன்றி திடீர் போராட்டத்தில் ஈடுபடுதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் சூலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு பாஜக தலைவரும், கோயம்புத்தூர் தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை மீது 2 காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படை கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலை மற்றும் 300 பாஜகவினர் மீது 2 பிரிவுகளின் கீழ் சூலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. ஒண்டிப்புதூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக மேலும் சிங்கநல்லூர் காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளத.

இதுகுறித்து  செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ஆளும் கட்சியும் போலீஸாரும் அராஜகப் போக்கில் ஈடுபட்டுள்ளனர். 10 மணியை தாண்டி பாஜக எப்போதும் பிரச்சாரம் செய்வதில்லை. 10 மணி ஆனதால் பிரச்சாரத்தை நிறுத்திக் கொண்டு பிரச்சார வாகனத்தில் இருந்த மைக்கை ஆப் செய்து விட்டு வாகனத்தில் இருந்த விளக்குகளை யும் அணைத்து விட்டோம். ஆனாலும் காவல்துறையினர் எங்களை தடுத்து நிறுத்தினர். அதனால்தான் நடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. கோவையில் ஆளும் கட்சியின் பணத்தை ட்ரான்ஸ்போர்ட் செய்வதற்கான வேலையை போலீசார் செய்து வருகின்றனர்.

கோவையில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சபரீசன் மீட்டிங் எடுத்து வருகிறார். காவல்துறைக்கு நோக்கம் எல்லாம் திமுகவின் பணத்தை எவ்வாறு பட்டுவாடா செய்யலாம் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனர். ஆளும் கட்சியின் பண பட்டுவாடாவை ஒருபோதும் பாஜக தடுத்து நிறுத்த போவதில்லை.

கடந்த முறை என் மீது வழக்கு போட்ட போதும் நான் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி பேசி இருக்கிறேனா என்றெல்லாம் கேட்டேன் நான் பிரச்சாரம் முடிந்த பிறகு பிரச்சார வண்டி யில் செல்லும்போது காத்திருந்த மக்களை சமாதானப்படுத்தி செல்கிறேன்.

தோல்வி பயம் திமுகவுக்கு வந்ததன் காரணமாக இதுபோன்ற செயல்களை செய்து வருகின்றனர். வேண்டுமென்றே பாஜகவின் மீது வன்மத்தை வைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். வேண்டுமென்றே பாஜக தொண்டர்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகிறது காவல்துறை.  காவல்துறை நேர்மையாக இருக்க வேண்டும். அதிகாரிகள் நேர்மையாக இருக்க வேண்டும். காவல்துறைக்கு சட்டமே தெரியாமல் எப்படி சட்டத்தை நிலை நாட்டுவார்கள். காவல்துறை ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருகிறது என கடுமையாக விமர்சனம் செய்தார்.