சென்னை: பாஜக சட்டமன்ற கட்சித்தலைவர் நயினார் நாகேந்திரன் ஆண்மையோடு இருந்தாரா? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக ஆட்சியின் நடவடிக்கைகள் குறித்து பாஜக கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகிறது. ஆனால், சட்டமன்ற எதிர்க்கட்சியான அதிமுகவோ வாய் திறக்க மறுத்து வருகிறது. முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதான தொடர் முறைகேடு புகார்கள், லஞ்ச ஒழிப்பு காவல்துறை ரெய்டு போன்றவற்றால் அதிமுக செய்வதறியாமல் அடக்கி வாசிப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய நெல்லை தொகுதி பாஜக எம்எல்ஏவும், பாஜக சட்டமன்ற கட்சி தலைவராகவும் உள்ள நயினார் நாகேந்தின், அதிமுக எதிர்க்கட்சி இல்லை என்று விமர்சித்ததுடன், சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசக்கூடிய ஒரு அதிமுகவினரைக் கூட பார்க்க முடியவில்லை என்று ஏளனம் செய்திருந்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன் வெளியிட்டுள்ள டிவிட் பதிவில், ஆண்மை எதற்கு தேவை? தைரியம் போதுமே பேசுவதற்கு !! சகோதரர் நைனார் நாகேந்திரன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலில் எத்தனை முறை விழுந்தார் அப்போது அவர் ஆண்மையோடு தான் இருந்தாரா ? என கேள்வி எழுப்பி உள்ளார்.