பாரிஸ்:
பாரிஸில் நடைபெற்ற உலக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா தங்கம் வென்றார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், உலக கோப்பை வில்வித்தை, ‘ஸ்டேஜ்–3’ போட்டி நடக்கிறது. இதில் ஆண்களுக்கான தனிநபர் ‘காம்பவுண்டு’ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, ரஷ்யாவின் ஆன்டன் புலேவ் மோதினர். அபாரமாக ஆடிய அபிஷேக் 146–138 என வெற்றி பெற்றார்.

அடுத்து நடந்த பைனலில் அபிஷேக், அமெரிக்காவின் கிரிஸ் ஸ்ஷாப் மோதினர். விறுவிறுப்பான இப்போட்டி 148–148 என, சமநிலை அடைந்தது. பின், ‘டை பிரேக்கர்’ முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது. இதில் அபிஷேக் 10–9 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இது, உலக கோப்பை தனிநபர் பிரிவில் அபிஷேக் கைப்பற்றிய 2வது தங்கம். இதற்கு முன், 2015ல் போலந்தில் நடந்த உலக கோப்பை ‘ஸ்டேஜ்–3’ போட்டியில் தங்கம் வென்றிருந்தார்.