சவுதாம்ப்டன்:
லங்கை அணிக்கு எதிரான டி-20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி டி-20 ஆட்டம் சௌதாம்ப்டனில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களாக ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மலான் களமிறங்கினர்.

இந்த இணை இங்கிலாந்துக்கு அதிரடி தொடக்கத்தைத் தந்து சிறப்பான அடித்தளத்தை அமைத்தது. முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்த நிலையில் அரைசதம் அடித்த பேர்ஸ்டோவ் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். லியாம் லிவிங்ஸ்டன் 14, சாம் பில்லிங்ஸ் 2, கேப்டன் இயான் மார்கன் 1 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விளையாடி வந்த மலான் 48 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து 19-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.முடிவில் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர்களான தனுஷ்க, குஷால் பெராரா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அதன் பிறகு களமிறங்கிய ஒஷாடோ, நிரோஷன், பினுரா ஆகியோர் முறையே 19, 11, 20 ஆகிய ரன்களை எடுத்தனர். மற்றவர்கள் ஓரிலக்க ரன்களையே எடுத்தனர்.

இங்கிலாந்து அணியின் அபார பந்துவீச்சால் இலங்கை அணி 18.5 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 91 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 89 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.