டெல்லி:

செங்கோட்டை வளாகத்தில் உள்ள பழங்காலத்து கிணறுகளை சுத்தம் செய்யும் பணியை தொல்பொருள் ஆய்வு துறை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்ட போது ஒரு கிணற்றில் வெடிக்கும் தன்மை கொண்ட குண்டுகள், வெடி பொருட்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பயன்படுத்த கூடிய தன்மை கொண்ட சிறு ரக பீரங்கிகளும் கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக தேசிய பாதுகாப்பு படை வரவழைக்கப்பட்டு. அந்த பகுதி முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பார்வையாளர்கள் அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

‘‘மொத்தம் 5 சிறு பீரங்கிகள், வெடிக்கும் தன்மை கொண்ட 44 குண்டுகள், வெடித்த 87 குண்டுகள் கைப்பற்றப்பட்டது’’ என்று தேசிய பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட வெடி மருந்து, குண்டுகளை தடயவியல் ஆய்வாளர்கள், வெடிபொருள் அறிவியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். ‘‘இவை சுதந்திரத்துக்கு முன்பு முகலாய மன்னர்கள் காலத்தில் தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம்’’ என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொல்பொருள் ஆய்வு துறை வடக்கு மண்டல இயக்குனர் ஷர்மா கூறுகையில்,‘‘ இது வரலாற்று சிறப்புமிக்க கண்டுபிடிப்பாகும். செங்கோட்டையில் பல பழங்காலத்து கிணறுகள் உள்ளது. இவை ஆங்கிலேயர் காலத்தில் புணரமைக்கப்பட்டது. பதிப்பக கட்டடத்தில் பின்புறம் உள்ள கிணற்றில் இருந்து இவை கைப்பற்றப்பட்டது.

அந்த பகுதியில் உள்ள சுவரை சுத்தம் செய்தபோது இது தெரியவந்தது. ஒரு பெட்டியில் அடைக்கப்பட்டு குழியில் புதையுண்டு கிடந்தது. இது கண்டுபிடிக்கப்பட்டவுடன் அனைத்து தொல்லியல் துறை அதிகாரிகளும் நேரில் வந்து பார்வையிட்டனர். பின்னர் டெல்லி காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது’’ என்றார்.

‘‘இதையடுத்து மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு துப்பறியும் மற்றும் செயலிழக்கும் பிரிவு போலீசார் வரைவழைக்கப்பட்டு முழு வளாகமும் சோதனை செய்யப்பட்டது. தேசிய பாதுகாப்பு படை வீரர்களும் இங்கு வந்து 6 மணி நேர போராட்டத்திற்கு பின் அனைத்து வெடி குண்டுகளையும் செயலிழக்கச் செய்தனர். அனைத்து வெடி பொருட்களும் அறிவியல் ஆய்வுக்காக அவர்கள் எடுத்துச் சென்றனர்’’ என்று டெல்லி போலீஸ் வடக்கு துணை கமிஷனர் ஜத்தின் அகர்வால் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,‘‘ வளாகம் முழுவதும் முழு சோதனை மேற்கொள்ளப்பட்டது. எவ்வித வெடிபொருட்களும் இல்லாதது உறுதி செய்யப்பட்டது. தற்போது அங்கு சகஜ நிலை திரும்பிவிட்டது. கைப்பற்றப்பட்ட அனைத்து வெடி பொருட்களும் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் அறன் அமைத்து வைக்கப்பட்டது. தயாரிப்பு காலம் மற்றும் அதன் தன்மை குறித்து அறிவிதற்காக ஆய்வு கூட பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.