தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் அந்த கட்சியின் மாநில துணை தலைவர் அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார், இந்த தொகுதியின் ஆழம் தெரியாமல் காலை விட்ட அவருக்கு அந்த தொகுதி மக்கள் தோல்வியை பரிசாக வழங்கி இருக்கின்றனர்.

திமுக-வின் மொஞ்சனூர் இளங்கோவை எதிர்த்து களம் கண்ட போதும் இவருக்கு போட்டியாக மாறியது அரவக்குறிச்சியை சேர்ந்த சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த 40000 வாக்காளர்கள் என்பது குறிப்பிடதக்கது.

கர்நாடக மாநில காவல்துறை அதிகாரி பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் குதித்துள்ள இந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன் இந்த தொகுதி பாஜக-வுக்கு சாதகமான தொகுதியல்ல என்று சொல்லப்பட்டது.

இந்த கருத்தையும் மீறி இங்கு போட்டியிட்ட அண்ணாமலையை சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பள்ளப்பட்டி பகுதிக்குள் பிராச்சாரம் செய்ய அந்த பகுதி மக்கள் அனுமதி மறுத்ததோடு மறியலும் செய்தனர்.

மறியல் காரணமாக பொங்கி எழுந்த அண்ணாமலை அந்த பகுதி மக்களை மிரட்டும் தொனியில் பேசியதோடு, தனது இன்னொரு முகமான கர்நாடக முகத்தை காட்ட வேண்டிவரும், மக்களை தூணடிவிடும் திமுகவின் செந்தில்பாலாஜியை ஒரு கை பார்ப்பேன் என்று ஏகவசனத்தில் பேசினார்.

அண்ணாமலையின் இந்த பேச்சு ஏற்கனவே குடியுரிமை சட்டம் தொடர்பாக சிறுபான்மை சமுதாய மக்களிடம் கனன்று கொண்டிருந்த நெருப்பை ஊதி தீயாக பரவவிட்டது இதன் காரணமாக 25000 வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை தோற்றார்.

அரவக்குறிச்சி மக்களும் அவருக்கு தங்களின் மற்றொரு முகத்தை காட்டி அவரது வாய்சவடாலுக்கு பதிலடி கொடுத்ததோடு, இந்த தொகுதி எப்பொழுதும் தி.மு.க. வின் நம்பிக்கைக்கு உரிய தொகுதி என்று மீண்டும் நிரூபித்திருக்கின்றனர்.