சென்னை: ஆரணி தொகுதியில் ரூ.15 கோடி அரசு மானியத்துடன் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், அங்கு, சாலை வசதியுடன் கூடிய தகுதியான நிலம் கண்டறிந்து தெரிவித்தால அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேர;jதின்போது, ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ். ராமச்சந்திரன், ஆரணி தொகுதியில் விவசாயமும் நெசவும் பிரதான தொழிலாக உள்ளதாகவும், 2 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர். அதிக அளவில் நெல் உமியைக் கொண்டு எண்ணெய் எடுக்கவும், பட்டு கைத்தறி உற்பத்திக்கும் தேவைப்படும் மூலப் பொருட்கள் அதிகம் கிடைப்பதால் ஆரணி தொகுதிக்கு ஒரு சிப்கோ தொழிற்பேட்டை அமைக்க அரசு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்த சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், திருவண்ணாமலையில் 15.56 ஏக்கரில் 13 தொழிற்மனைகள் மற்றும், 16 தொழிற்கூடங்களுடன் தொழிற்பேட்டை இயங்கி வருவதாகவும், பெரியகோள்ப்பாடி கிராமத்தில் 57.18 ஏக்கர் பரப்பளவில் 177 தொழில் மனைகள் கொண்ட புதிய தொழிற்பேட்டைகள் மேம்பாட்டு பணிகள் அரசால் மேற் கொள்ளப்பட்டு வருகிறது முதற்கட்டமாக முப்பத்தி மூன்று தொழில் மனைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.
மேலும், ஆரணி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சாலை வசதியுடன் கூடிய தகுதியான நிலம் கண்டறிந்து தெரிவிக்கும் பட்சத்தில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், குறைந்தபட்சம் 20 தனியார் தொழில் முனைவோர்கள் சேர்ந்து தகுதியான நிலத்துடன் தொழிற்பேட்டை அமைக்க முன்வரும் பட்சத்தில் அதிகபட்சமாக ரூ. 15 கோடி மாநில அரசின் மானியத்துடன் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இவ்வாறு கூறினார்.