சென்னை: முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகனின் மனைவி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது இறுதி சடங்கு மாலை நடைபெற உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அரக்கோணம் தொகுதி தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினரும்,, முன்னாள் மத்தியஅமைச்சரும், மருத்துவம் உள்பட  பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு உரிமையாளரான ஜெகத்ரட்சகன் மனைவி அனுசுயாவுடன் (வயது 68)  அடையாறு கஸ்தூரிபாய் நகர் முதல் மெயின் ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.  அனுசுயா  கடந்த சில காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், குரோம்பேட்டையில் உள்ள தனது ரேலா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்,

அவரது உடல் அடையாறில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார், பின்னர் ஜெகத்ரட்சகனுக்கு ஆறுதல் கூறினார். மேலும், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. ஆர்.காந்தி உள்பட முக்கிய பிரமுகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து  பல்வேறு கட்சி தலைவர்களும், பிரமுகர்களும்  அஞ்சலி செலுத்தி  வருகின்றனர்.

அனுசுயாவின் இறுதி சடங்கு இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. அடையாறில் உள்ள வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெசன்ட் நகர் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

[youtube-feed feed=1]