மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஏ.ஆர். ரகுமானின் மகள் அணிந்து வந்த உடை குறித்து சர்ச்சை கிளம்பியதை தொடர்ந்து அவர் விளக்கம் அளித்துள்ளார். இஸ்லாமிய முறைப்படி முகத்திரை அணிவது தனது தனிப்பட்ட விருப்பம் என அவர் நெட்டிசன்களுக்கு பதிலளித்துள்ளார்.

raguman

ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றார். ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் கடந்த நிலையில் அதற்கான விழா மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் உட்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். ரகுமானுடன் அவரது மகள் கதீஜாவும் விழாவில் பங்கேற்றார்.

விழாவிற்கு வருகை தந்த ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா இஸ்லாமிய முறைப்படி முகத்திரை அணிந்துக் கொண்டிருந்தார். இது இணையத்தில் வைரலாகியது. தனது தந்தை ஏ.ஆர்.ரகுமானின் வற்புறுத்ததால் தான் அவ்வாறு உடை அணிந்துக் கொண்டுவந்ததாக நெட்டிசன்கள் விமர்சித்தனர்.

இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு பதிலளிக்கும் விதமாக தனது முகநூலில் கதீஜா பதிவிட்டுள்ள விளக்கத்தில், “ என் தந்தையுடனான உரையாடலுக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நிகழ்ச்சியில் நான் அணிந்திருந்த ஆடை எனது தந்தையின் வற்புறுத்தலால் அணிந்ததாகவும், அவர் இரட்டை நிலைப்பாடு கொண்டவர் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

நான் அணியும் உடை, எனது வாழ்க்கை முடிவுகளை தேர்ந்தெடுப்பதில் எனது பெற்றோருக்கு தொடர்பு இல்லை. முகத்திரை என்பது எனது முழு மனதுடன், மரியாதையுடனான தனிப்பட்ட விருப்பம். எனது வாழ்க்கையின் சில முடிவுகளை எடுக்க நான் பக்குவமடைந்துள்ளேன். அனைவருக்கும் தனக்கு விருப்பமான உடையை அணிய உரிமை உண்டு. அதை தான் நானும் செய்கிறேன். உண்மை நிலையை புரிந்துக் கொள்ளாமல் யாரும் எந்தவித ஒரு முடிவிற்கும் வரவேண்டாம் “ என குறிப்பிட்டுள்ளார்.