சென்னை: தமிழகத்தில் தோராயமாக 71.79 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணிக்கு  நிறைவு அடைந்தது. வாக்குச்சாவடி மையங்களில் இரவு 7 மணி வரிசையில் காத்திருந்த வாக்காளர்களுக்கு வாக்களிக்க டோக்கனும் வழங்கப்பட்டது.

இந் நிலையில் வாக்குப்பதிவு குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியதாவது: தமிழகத்தில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இரவு 7 மணிக்கு தேர்தல் நிறைவடைந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை சீல் வைத்து மண்டல அலுவலருக்கு ஒப்படைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.

முழுமையான வாக்குப்பதிவு சதவீதம் வரவில்லை. தொலைபேசி வழியாக பெற்ற தகவலின்படி 71.79% வாக்குகள் பதிவாகி உள்ளது. முழு விவரம் நள்ளிரவு 12 மணி அளவில் தெரியவரும். தமிழகத்தில் அதிகளவாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78% வாக்குகள் பதிவு ஆகி உள்ளது. தமிழகத்தில் நாளை முதல் தேர்தல் பறக்கும் படை சோதனை நடைபெறாது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறைகளில் சிசிடிவி கேமிராவுடன் கூடிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று கூறினார்.