சென்னை:

சைக்குயில் பி.சுசிலாவுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்ட இசை அமைப்பாளர் இளைய ராஜாவும், வைரமுத்துவும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் வகையில் பேசிக்கொண்ட நிகழ்வு, இவருக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் இன்னும் தொடர்வது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இளையராஜா,பாரதிராஜா,வைரமுத்து ஆகிய மூன்று பேரும் ஒரே ஒரே நேரத்தில் திரையுலகில் காலடி எடுத்து வைத்த கலைஞர்கள். கடுமையான உழைப்பின் காரணமாக, மூன்று பேரும் தங்கள் துறையின் உச்சத்திற்கு சென்றனர். இவர்களுக்குள் யார் பெரியவர் என்ற ஈகோ எழுந்ததன் விளைவாக பிரிவு ஏற்பட்டது.

வைரமுத்து தான் எழுதும் எழுத்துக்களாலேயே பாடல்களுக்கு பெருமை என்று கவுரம் கொள்ள, தனது இசை யால்தான வைரமுத்துவின் பாடல்கள் பிரபலமாவதாக இளையராஜாவும் ஒருவருக்கு ஒருவர்  குற்றம் சாட்டி வந்த நிலையில், அவர்களுக்கிடையேயான பிரிவு நிரந்தரமானது. அதையடுத்து தனித்தனியாக தங்களது பணியில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில் திரையுலக பின்னணி பாடகியான இசைக்குயில் பி.சுசிலாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அவரது திரையுலக பணி  65 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, அவரை சிறப்பிக்கும் வகையில் ‘சுசீலா 65’ என்ற பெயரில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில்  இசைஞானி இளையராஜா, கவிப்பேரரசு  வைரமுத்து உள்பட அனைத்து திரையுலக பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, வைரமுத்து, இளையராஜா இருவரும், நீண்ட காலத்திற்கு பிறகு ஒரே மேடையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின்போது, சுசீலாவை வாழ்த்திப் பேசிய இசைஞானி இளையராஜா, மாலை பொழுதின் மயக்கத்திலே பாடலை பாடி, “இன்றைய இளைஞர்களுக்கும் இந்த பாடல் வரிகள் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். அதனால்தான் சொல்கிறேன், கவிஞர் கண்ணதாசனைப் போல உலகத்தில் ஒரு கவிஞன் கிடையவே கிடையாது என்று நாசூக்காக வைரமுத்துவை மட்டம் தட்டினார்.

மேலும், கவிஞரை போல பாடலைச் சொன்னவுடன் வரிகளைச் சொல்லக்கூடியவர்கள் உலகத்தில் ஒருவரும் கிடையாது. கண்ணதாசனின் புகழ் ஓங்கும் வகையில் சுசீலா அந்த பாடலைப் பாடி, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார்” என்றார்.

அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, “தனது உச்சரிப்பின் தெளிவில் ஒரு மொழியின் பரிமாணத்தை உண்டாக்குவதில் சுசீலாவுக்கு இணையாக வேறு யாரையுமே கருத முடியாது. பேசும்போது எளிமையாக இருக்கும் சுசீலாவின் குரல் பாடும்போது தேவதையாக மாறிவிடுகிறது. சுசீலாவின் கணவர் டாக்டர் மோகன் இறந்து முதலாமாண்டு நினைவஞ்சலி வரும் சமயத்தில், சுசீலா எனது வீட்டுக்கு வந்தார். கணவருக்கு நினைவஞ்சலி எழுதித் தரும்படி கேட்டார். எழுதிக்கொடுத்தேன். அது என்னுடைய வரியல்ல, கண்ணதாசன் வரிகள் என்றும்,  உலகில் சிறந்த கவிஞர் கண்ணதாசன் என்பதில் எங்களுக்கும் வேறுபாடு இல்லை என்று கூறியவர், அதுபோல உலகத்தில் சிறந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடும் இல்லை என்று இளையஞராவுக்கு பதிலடி கொடுத்தார். இது நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களிடையே சலசலப்பை உண்டாக்கியது.

கவிஞர் வைரமுத்து எழுதிய இது ஒரு பொன்மாலைப் பொழுது பாடல்தான், அவரை திரையுலகில் முதன்முதலாக  அறிமுகப்படுத்தியது. இந்த பாடல் நிழல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த படத்துக்கு இசை அமைத்தவர் இளையராஜா. இளையராஜாவின் கெத்தான இசையில் வைரமுத்துவின் முத்தான வரிகள் கொண்ட இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவி பெரும் வரவேற்பை பெற்றது.

வைரமுத்து, இளையராஜா கூட்டணி இணைந்து நூற்றுக்கணக்கான தேன்சிந்தும் பாடல்களை கொடுத்துள்ள நிலையில், இவருக்கும் இடையே ஏற்பட்ட ஈகோ பிரச்சினை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஒருவருக் கொருவர் பேச்சு வார்த்தையின்றி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.