சென்னை:
ஒமைக்ரான் பாதிப்பை கண்காணிக்கத் தமிழ்நாட்டின் 4 விமான நிலையங்களில் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனாவைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் தற்போது ஒமைக்ரான் என்ற சொல்லைக் கேட்டாலே அச்சமடைந்து வருகின்றன. தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை மற்றும் வீரியமிக்க வைரசுக்கு ஒமைக்ரான் என்று விஞ்ஞானிகள் பெயர் வைத்துள்ளனர்.
கொரோனா பாதிப்பை ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸின் புதிய வேரியன்ட் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மருத்துவ பெயர் B.1.1.529 என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். இப்படி பொதுவாக அழைக்க முடியாது என்பதால் இதற்கு ஒமைக்ரான் என்று உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது.
கடந்த வாரம்தான் ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், அவை என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், அதிகமுறை உருமாற்றம் அடைவதால் இவை நிச்சயம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மருத்துவர். மரியா வான் கெர்கோ கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, மொசாம்பிக், மாலவி, லெசோதோ, செஷல்ஸ் ஆகிய நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கையாக இங்கிருந்து வரும் விமானங்களுக்கு அமெரிக்கா, ஐரோப்பியநாடுகள், சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலும் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்ட நாடுகளில் இருந்து வந்த 2 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மாஸ்க் அணிதல், தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அலட்சியம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவருகின்றன.
ஒமைக்ரான் ‘ஆபத்தில் உள்ள நாடுகளில்’ இருந்து வரும் சர்வதேச பயணிகளின் வருகை மற்றும் கொரோனா ஸ்கிரீனிங்கை கண்காணிக்க, தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 விமான நிலையங்களில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒமைக்ரான் ‘ஆபத்தில் உள்ள நாடுகளின்’ பட்டியல் மற்றும் தமிழ்நாடு விமான நிலையங்களை அடையும் சர்வதேச பார்வையாளர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட கொரோனா சோதனை வழிகாட்டுதல்கள் (தொழில்நுட்ப ரீதியாக, இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களும்), விரிவான விமானப் பயண வழிகாட்டுதல்களை இந்தியச் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், வெளியிட்டுள்ளது.
இன்று, இந்திய விமான நிலையங்களுக்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் இந்தியச் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.