சென்னை: தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக மனிதவள மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அரசாணையில், ஏற்கெனவே லோக் ஆயுக்தாவின் பொறுப்பு தலைவராக பதவி வகித்து வரும் ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் இனி தலைவராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறை சாராத உறுப்பினர்களாக நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவரான ராமராஜ் மற்றும் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முன்னாள் உறுப்பினரான ஆறுமுக மோகன் அலங்காமணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவரான ராஜமாணிக்கம் 2027-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி வரை  பதவி வகிப்பார் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, உறுப்பினர்களான ராமராஜ் மற்றும் ஆறுமுக மோகன் அலங்காமணி ஆகியோர் 5 ஆண்டுகளோ அல்லது 70 வயது நிறைவடையும் வரையிலோ பதவியில் இருப்பார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]