சென்னை,
அரசு மருத்துவக்கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது. நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் ஜூலை 7-ந் தேதி வரை 11 நாட்கள் மட்டுமே விண்ணப்பம் விநியோகம் நடைபெற்றுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு ஜூலை 8-ந் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
22 அரசு மருத்துவ கல்லூரிகளிலும், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
ஜூலை 17ந்தேதி முதல் எம்பி.பிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்குகிறது.
மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் 23-ந் தேதிக்கு பின்னர் எடுக்கப்பட்ட ரூ.500-க்கான வங்கி வரைவோலை (டி.டி.) கொடுத்து விண்ணப்பம் வாங்க வேண்டும்.
நிர்வாக ஒதுக்கீட்டில் சேர விரும்பும் தமிழக மாணவர்களும், அரசு கல்லூரிகளில் படிக்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்திய (என்.ஆர்.ஐ.) மாணவர்களும் தனி விண்ணப்பம் பெறவேண்டும்.
அரசு கல்லூரிகளில் படிக்க விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. அவர்கள் சாதி சான்றிதழ் நகல் கொடுக்க வேண்டும்.
ஆனால் நிர்வாக ஒதுக்கீட்டு விண்ணப்பங்களுக்கு ரூ.500-க்கான வரைவோலை கொடுக்கவேண்டும்.
விண்ணப்பம் ஜூலை 7-ந் தேதி வரை வினியோகிக்கப்படும். மொத்தம் 25 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடித்து வைக்கப்பட்டுள்ளன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செயலாளர், தேர்வுக்குழு, மருத்துவ கல்வி இயக்குனரகம், 162-பெரியார் ரோடு, கீழ்ப்பாக்கம், சென்னை- 600010 என்ற முகவரிக்கு ஜூலை 8-ந் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பிவைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள், சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி, கோவை இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி ஆகியவைகளில் 3,050 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.
இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் போக, எஞ்சிய இடங்களில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதமும், மத்திய கல்வி வாரிய திட்டத்தில் படித்த தமிழக மாணவர்களுக்கு 15 சதவீத இடங்களும் ஒதுக்கப்படும்.
10 சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 783 இடங்கள் உள்ளன. அந்த இடங்களில் மாநில திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 664 இடங்களும், சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட மத்திய கல்வி வாரியத்தில் படித்த மாணவர்களுக்கு 119 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்படும்.
ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரியில் 100 இடங்கள் உள்ளன. 11 சுயநிதி பல் மருத்துவ கல்லூரி களில் 610 அரசு ஒதுக்கீட்டு இடங்களும், 7 சிறுபான்மை சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் 305 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன.