த்துவா, காஷ்மீர்

ம்மு பகுதியில் உள்ள கத்துவாவில் ஆப்பிள்களில் அரசுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததால் வியாபாரிகளிடையே கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசால் விதி எண் 370 விலக்கப்பட்டு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.   அத்துடன் மாநிலம் ஜம்மு மற்றும் காஷ்மீர் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.   அதையொட்டி பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  தற்போது அந்த கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜம்மு பகுதியில் உள்ள கத்துவா சந்தையில் உள்ள பழ வியாபாரிகள் காஷ்மீர் ஆப்பிள்களை வாங்கி விற்று வருகின்றனர்.  அந்த ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்த அட்டைப்பெட்டியில்  மற்றும் ஒரு சில ஆப்பிள்கள் மீதும் அரசுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.    ஆங்கிலம் மற்றும் உருது மொழியில் அவை எழுதப்பட்டிருந்தன.

அந்த ஆப்பிள்களில் “இந்தியாவே வெளியேறு”,  ”மேரே ஜான் இம்ரான்கான்” :ஐ லவ் புர்கன் வாணி”, ஜாகிர் முசா திரும்பி வரவும்”   என எழுதப்பட்டிருந்தன.  இதையொட்டி வர்த்தகர்கள் பாகிஸ்தானுக்கு எதிராகவும் தீவிரவாதத்துக்கு எதிராகவும் கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.    மேலும் இது குறித்து அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத்தினர்.

ஆப்பிள் வியாபாரிகளிடம் பேசி போராட்டத்தைக் கைவிட வைத்த காவல்துறை துணை சூப்பிரண்ட் மஜித் இது குறித்து விசாரணை நடப்பதாகவும் விரைவில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.