இந்தியாவில் காஷ்மீருக்கு அடுத்தபடியாக ஆப்பிள் விளைச்சல் செய்யும் மாநிலம் ஹிமாச்சல் பிரதேசம்.

ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை ஆப்பிள் அறுவடை காலம் உச்சம் பெறும் நிலையில் இதன் கொள்முதல் விலை கடந்த ஆண்டைவிட சுமார் 20 சதவீதம் சரிந்திருப்பது அம்மாநில விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு கிலோ ஒன்றுக்கு ரூ. 88 க்கு வாங்கிய அதானி நிறுவனம் இந்த ஆண்டு அதே உயர் ரக ஆப்பிள்களுக்கு வெறும் ரூ. 72 மட்டுமே வழங்குகிறது.

மாநிலத்தின் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை தனியாரிடம் மட்டுமே விற்கவேண்டிய சூழல் தான் இங்கு உள்ளது, மண்டிகள் இல்லாத நிலையில் அதானி போன்ற பெருநிறுவனங்களிடம் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

ஆப்பிள் தோட்டத்தில் விளையும் பழங்களில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே அவர்கள் நிர்ணயிக்கும் தரத்திற்கு ஏற்ப நல்ல நிறத்துடன் செழிப்பாக உயர் ரகங்களாக இருக்கும் மீதமுள்ள 65 சதவீத பழங்களின் கொள்முதல் விலை அதைவிட குறைவாக இருக்கிறது.

ஆப்பிள் விளைவிப்பதற்கான செலவு கடந்த பத்தாண்டுகளில் பலமடங்கு உயர்ந்திருக்கும் நிலையில் 2011ம் ஆண்டு ஒரு கிலோ ரூ. 65 க்கு கொள்முதல் செய்யப்பட்டது இந்த ஆண்டு 72 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் வரை உற்பத்தி செலவு மற்றும் அவற்றை பேக்கிங் செய்வதற்கான செலவு போக சொற்ப லாபமே விவசாயிகளுக்கு மிஞ்சுகிறது. கடந்த ஆண்டு ரூ. 2000 வரை விற்ற 25 கிலோ பெட்டி இந்த ஆண்டு 1500 ரூபாய்க்கும் குறைவாகவே விற்பனையாகிறது என்று கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் குளிர்பதன கிடங்குகளில் அவற்றை சேமித்து வைத்து ஆண்டு முழுவதும் விற்பதுடன், பருவம் மாறி போகும் நேரத்தில் கிலோ ரூ. 300 வரை விற்று நல்ல லாபம் சம்பாதிக்கின்றன.

அதானி போன்ற நிறுவனங்களுக்கு சேமிப்பு கிடங்குகள் அமைக்க மாநில அரசு மாணிய விலையில் நிலங்களை தாராளமாக ஒதுக்கிவரும் சூழலில், அவர்களோ விதிமுறைகளை மீறி செயல்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

படம் நன்றி : தி வயர்

மேலும், தனியாருக்கு ஊக்கத்தொகையளித்து ஊக்குவிக்காமல் இதுபோன்ற சேமிப்பு கிடங்குகளை ஆங்காங்கே கூட்டுறவு முறையில் விவசாயிகள் தாங்களாக அமைத்துக்கொள்ள மாநில அரசு ஊக்கமளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.

தனியார் நிறுவனங்களிடம் விவசாயிகள் தங்கள் விருப்பம்போல் விற்பனை செய்து கொள்வதால் அவர்களின் வாழ்வு முன்னேறும் என்று பாஜக அரசின் வேளான் சட்டங்களுக்கு முட்டுக்கொடுத்தவர்கள் தற்போது 10 ஆண்டுகளில் வெறும் 7 ரூபாய் மட்டுமே தங்கள் உழைப்பிற்கான ஊதிய உயர்வாக பெற்றிருப்பது கண்டு வாயடைத்து போயுள்ளனர்.