சென்னை,

றைந்த தமிழக முதல்வர் சிகிச்சை தொடர்பான மருத்துவ அறிக்கையை தர அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சுமார் 75 நாட்களாக உடல்நலமில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இறுதியில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விரிவான தகவல்களோ, அவர் சிகிச்சை பெற்று வந்த படங்களோ இதுவரை வெளியிடப்படவில்லை.

இதன் காரணமாக அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக  பல பொதுநல வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் அதிமுகவை சேர்ந்த ஜோசப் என்பவர்,  ஜெயலலிதா மரணம் தொடர்பாக, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள், மூன்று பேர் கொண்ட குழுவை கொண்டு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இன்று மனுவை விசாரித்த உயர்நீதி மன்றம், இந்த மனுவை தாக்கல் செய்திருந்த அதிமுக உறுப்பினர் ஜோசப் என்பவர் குறித்து கேள்வி எழுப்பினர். எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும்,  விசாரணையின்போது, அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு  அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான தகவல்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யத்தயார் என்றும் கூறினார்.

இதையடுத்து, இது தொடர்பாக நான்கு வாரங்களில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் விசாரணையை, பிப்., 23ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.