தமிழக பாஜகவின் மாநில தலைவராக ஏ.பி முருகானந்தம் நியமிக்கப்பட உள்ளதாக, அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, தனது பாஜக மாநில தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவிகளை அவர் ராஜினாமா செய்தார். இதனால் பாஜகவுக்கு புதிய மாநில தலைவர் நியமிக்கப்பட வேண்டிய சூழல் உருவானது.

பாஜக மாநில தலைவரை தேர்வு செய்வதில் கடந்த இரு தினங்களாக கடும் குழப்பம் நீடித்து வருகிறது. தலைவர் பதவிக்கான போட்டியில், வானதி ஸ்ரீனிவாசன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், கருப்பு முருகானந்தம், ஏ.பி முருகானந்தம், இல.கணேசன் ஆகியோரின் பெயர்கள் இருப்பதால், யாரை தேர்வு செய்வது என்கிற குழப்பத்தில் அக்கட்சியின் தலைமை இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பாஜகவின் மாநில தலைவராக ஏ.பி முருகானந்தம் நியமிக்கப்பட இருப்பதாக அக்கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் என்றும், அதுவரை இழுபறி நிலையை தொடர பாஜக தலைமை விரும்புவதாகவும் அக்கட்சியின் நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கோவை மாவட்டத்தை சேர்ந்த ஏ.பி முருகானந்தம், பாஜகவின் அகில இந்திய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளராகவும், இளைஞரணியின் தேசிய துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

பாஜக நிர்வாகிகள் இடையே நிலவி வரும் இந்த கருத்துக்களால், பாஜகவின் அடுத்த மாநில தலைவர் குறித்த குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.