அமராவதி: கொரோனாவால் உயிரிழப்பவர்களின் இறுதிச்சடங்கிற்கு ரூ.15 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்து உள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டும் நிதி உதவி வழங்ககப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள லாக்டவுன் காரணமாக வேலையிழப்பும் ஏற்பட்டுள்ளதால், சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த உடல்களை அடக்கம் செய்யவோ, எரியூட்டவோ  செய்ய வசதியின்றி ஏழை மக்கள்  வறுமையில் வாடி வருகின்றனர். இதனால், உயிரிழந்தவர்களின் உடல்களை பெற பலர் முன்வருவதில்லை.

இந்த நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி,   கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கிற்கு அவர்களின் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்’ என  அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக  ஆந்திர அரசின் தலைமைச் செயலர் அனில் குமார் சிங்கால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

‘ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த மாநிலத்தில் 2.07 லட்சம் பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். 9,271 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இறுதிச் சடங்கு செய்ய ரூ.15 ஆயிரம் அரசு சார்பில் வழங்க, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுமதியளிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான ஒதுக்கப்பட்ட நிதியை இந்த செலவினங்களுக்குப் பயன்படுத்தலாம். மாநில சுகாதாரத்துறை மற்றும் குடும்பநலத்துறை ஆணையர் இதற்குரிய நிதியை மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒதுக்கீடு செய்வர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.