தமிழகஅரசின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1கோடி, எம்.பி., எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியம் நிதியாக அறிவிப்பு…

Must read

சென்னை: தமிழக அரசின் பொதுநிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் 1 கோடியுடன், எம்.பி., எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியம் நிதியாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக உதவி செய்யும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகஅரசுக்கு பொது நிவாரண நிதி வழங்க வேண்டும் என கடந்த வாரம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.  உலகெங்கும் உள்ள தமிழர்கள் தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது நேரடியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதி மூலமாகவோ நிவாரண உதவி வழங்கலாம் என அறிவித்திருந்தார்.

முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று வெளிநாடுவாழ் தமிழர்கள், தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சிகள் தொடங்கி பொதுமக்கள், மாணவர்கள் வரை நிதியுதவி அளித்து வருகின்றனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்  ரூ.1 கோடியும், தனது ஒரு மாத சம்பளத்தையும் வழங்கினார். தொடர்ந்து திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சிகள், பெரும் மற்றும் சிறு நிறுவனங்கள் தங்களால் முடிந்த நிதிகளை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில்,  அதிமுகவின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாயும், அதிமுக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் வழங்கப்படும் என, ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, (OPS – EPS) தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (மே 17) கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவத,

“அதிமுகவின் சார்பில் கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாயும், அதிமுக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் வழங்கப்படும். கொ ரோனா பெருந்தொற்றினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு, மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தரவும், உரிய நிவாரணங்களை வழங்கவும் அதிமுகவின் சார்பில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் அளிக்கப்படும்.

மேலும், அதிமுக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும், கரோனா நிவாரணப் பணிகளுக்கென முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.

இப்பெருந்தொற்றின் முதல் அலை மக்களைத் தாக்கிய நேரத்தில், கடந்த ஆண்டு அதிமுகவின் சார்பில் தமிழ்நாடு அரசிடம் 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இப்பொழுது அரசிடம் அதிமுகவின் சார்பில் வழங்கப்படுகின்ற 1 கோடி ரூபாய் மற்றும் அதிமுக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் ஆகியவற்றோடு, ஆங்காங்கே அதிமுக உடன்பிறப்புகள் தங்கள் பகுதிகளில் அல்லலுறும் மக்களுக்கு கொடைக்கரம் விரித்து நீட்டி நம் கொள்கை வழி நின்று மக்களின் துன்பம் துடைத்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

‘கருணை தீபம் ஏற்றி வைத்ததெங்கள் நெஞ்சமே, இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே, ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே’ என்ற எம்ஜிஆரின் கொள்கை வழி நின்று அதிமுக உடன்பிறப்புகள் நிவாரணப் பணிகளில் அக்கறை கொள்ளுங்கள் என்று ஜெயலலிதாவின் பெயரால் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்”.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

More articles

Latest article