சென்னை:

தகுதி நீக்கம் செய்யப்பட்ட டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது 16 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி 95 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக புகார் எழுந்தது. செந்தில் பாலாஜி உள்பட 3 பேர் மீது சென்னை அம்பத்தூரை சேர்ந்த கணேஷ்குமார் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் செந்தில் பாலாஜி உள்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் அளிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் கடந்த 27-ம் தேதி விசாரணைக்கு வந்தது. தலைமை அரசு வக்கீல் இந்த வழக்கில் ஆஜராகி வாதாட இருப்பதால் மனு மீதான விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசு வக்கீல் கேட்டுக் கொண்டார். இதனால் மனு மீதான விசாரணையை 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். மேலும் அதுவரை செந்தில் பாலாஜியை போலீசார் கைது செய்ய நீதிபதி தடை விதித்தார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, செந்தில் பாலாஜி, அன்னராஜ் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.