மதுரை:

திருமணம் நடைபெற இருந்த நிலையில், மதுவுக்கு எதிராக போராடி வரும் நந்தினி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


மதுவுக்கு எதிராக போராடி வரும் நந்தினியும் அவருடைய தந்தை ஆனந்தனும் மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி கைது செய்யப்பட்டனர்.

நந்தினியை விடுதலை செய்யக் கோரி வெள்ளி மற்றும் சனிக்கிழமை சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக இருந்தது.

தந்தையும் மகளும் தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஜுலை 9-ம் தேதி சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், ஜுலை 5-ம் தேதி நந்தினிக்கு திருமணம் நடைபெற இருந்தது. நந்தினி தனது 12 வயதிலிருந்தே மதுவுக்கு எதிராக போராடி வருகிறார்.

டாஸ்மாக்கிற்கு எதிராக போராடியது தொடர்பாக திருப்பத்தூர் போலீஸார் நந்தினி மற்றும் அவரது தந்தை மீது வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் மூலம் மதுபானங்களை அரசு விற்பது குற்றம். மது என்ன மருந்தா? உணவா? என நீதிமன்றத்தையும் அரசையும் கேள்வி எழுப்பினர்.

நீதிமன்றத்தை எதிர்த்து தேவையில்லாத கேள்வியை எழுப்பியதாகக் கூறி, நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தானாக தொடர்ந்தது.

இதனையடுத்து இருவரும் திருப்பத்தூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.