திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஆன்லைன் சூதாட்டம் காரணமாக பணத்தை இழந்த இளைஞர் அருண் குமார் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை கோரி இயற்றப்பட்டுள்ள மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அனுமதி வழங்காததால், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், ஏராளமானோர் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு, அதற்கு அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை முடிவை நாடுகின்றனர்.

சமீபத்தில் (ஜனவரி 1ந்தேதி) ஆட்டோ டிரைவர் ஒருவர் ஆன்லைன் ரம்மியில் ரூ.50ஆயிரத்தை இழந்ததால், தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கூத்தம்பூண்டி கிராமம் கருமன்கிணறு பகுதியை சேர்ந்தவர் அருண் குமார் என்ற 24வயதான பட்டதாரி  வாலிபர் தனது  தாயாருடன் வசித்து வருகிறார். இவர்  தனது ஸ்மார்ட் செல்போனில் ஒரு ஆண்டுகளாக ஆன்லைன் ரம்மி விளையாடுவதையே முழு நேரமாகக் கொண்டுள்ளார்.  இந்த ஆட்டத்திற்கு அடிமையான இவர் ஆரம்ப காலத்தில், சிறுசிறு வெற்றிகளை பெற்ற நிலையில்,  சமீப காலமாக, பணத்தை இழந்து வந்துள்ளார். மேலும், தனது   அம்மா மற்றும் பாட்டி ஆகியோர் கூலித்தொழில் செய்து கொண்டு வரும் பனத்தையும் வங்கிக் கணக்கில் போட்டு அதனையும் எடுத்து ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார்.

இந்த நிலையில், ரம்மியால், பெரும் பண நஷ்டம் ஏற்பட்டதை தாங்கிக் கொள்ள முடியாத அருண் குமார் தனது தாய்க்கும் பாட்டிக்கும் தெரிந்தால் தன்னை கடுமையாக திட்டுவார்கள் என எண்ணி  கடந்த 22 ஆம் தேதி தங்களது ஊர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அருண்குமாரை காணாத அவரது தாயார், அக்கம்பக்கத்தில் தேடி வந்த நிலையில், அருகே உள்ள  கள்ளிமந்தை  காவல் நிலையத்திலும் புகார் செய்தனர். இதையடுத்து அவரை காவல்துறையினரும் தேடி வந்தனர்.

இநத் நிலையில், அருண்குமார் உடல்  அந்த பகுதியில் உள்ள ஒரு  கிணற்றில் சடலமாக மிதந்தது தெரிய வந்தது. இதை கண்ட அந்த பகுதி மக்கள் உடனே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர்,  தீயணைப்புத் துறையினர் உதவியுடன் அருண் குமார் உடலை மீட்டு, உடற் கூராய்விற்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தன் உயிரை இளைஞர் மாய்த்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தங்க முட்டையிடும் வாத்து ஆன்லைன் ரம்மி – மாநில அரசுக்கு 28 சதவீதம் வருமானம்! ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு