சென்னை: தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு முழு ஆண்டு  தேர்வுகள்  நாளையுடன் முடிவடையும் நிலையில், நாளை மறுதினம் முதல்  கோடை விடுமுறை தொடங்குகிறது. மீண்டும் பள்ளிகள் திறப்பு குறித்து மே மாதம் இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்கப் பள்ளிகள் அனைத்திற்கும் நாளையோடு (ஏப்ரல் 17) முழு ஆண்டு தேர்வுகள் நிறைவடைகின்றன. இதைத்தொடர்ந்து, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே இந்த மாதம் இறுதிவரை தேர்வுகள் திட்டமிட்டிருந்த நிலையில்,  கோடை வெயிலின் தாக்கத்தினால் ஏப்ரல் 17-ம் தேதியோடு நிறைவு செய்ய பள்ளி கல்வித்துறை அமைச்சர் கூறியிருந்தார். அதன்படி, ஒன்றுமுதல் 3ம் வகுப்புவரை ஆண்டிறுதி தேர்வுகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், 4வது மற்றும் 5வது வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு நாளையுடன் முடிவடைகிறது.   இதனையடுத்து, நாளை முதல் 1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை தொடங்குகிறது. ஆனால், ஆசிரியர்கள் இந்த மாதம் இறுதிவரை பள்ளிகளுக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும், கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை இதுவரை இன்னும் அறிவிக்கவில்லை. மீண்டும் பள்ளி திறப்பு குறித்து மே மாதம் இறுதியில் அறிவிக்கப்படும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் நடுநிலை பள்ளி மாணவர்களான 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை  உள்ள மாணவ மாணவிகளுக்கு ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் முழு ஆண்டு தேர்வு தொடங்கி உள்ளது. இது ஏப்ரல் 24ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதுவரை தமிழ் மற்றும் ஆங்கிலம் தேர்வுகள் முடிவடைந்த நிலையில், வரும் , 18.04.2023 (செவ்வாய்) கணக்குத் தேர்வு, 19.04.2023 (புதன்கிழமை) அறிவியல் தேர்வு, 21.04.2023 வெள்ளிக்கிழமை மொழித் தாள்த் தேர்வு, 24.04.2023 சமூக அறிவியல் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]