தீபாவளிக்கு ‘அண்ணாத்த’ படம் வெளியாகும் எனவும், விரைவில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் ரஜினி நடித்து வருகிறார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

கொரோனாவால் பலமுறை தடைபட்ட படப்பிடிப்பு, தற்போது இரண்டாவது அலையின் தீவிரத்துக்கு முன்னதாக பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு.

இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் இறுதிக்கட்டப் பணிகளிலும் தீவிரம் காட்டியுள்ளது படக்குழு.

டப்பிங் பணிகளையும் கிட்டத்தட்ட முடித்துவிட்டது படக்குழு. இதுவரை படமாக்கிய காட்சிகள் அனைத்தையுமே படக்குழுவினர் திரையிட்டுப் பார்த்துள்ளனர்.

ஏற்கெனவே தீபாவளி வெளியீடு என்று அறிவித்திருந்தது படக்குழு. ஆனால், கொரோனா இரண்டாவது அலை தீவிரத்தால் வெளியீட்டில் மாற்றம் இருக்கும் என்று கருதப்பட்டது. படத்தின் வேலைகள் திட்டமிட்டபடி முடிந்துவிட்டதால், தீபாவளி வெளியீட்டில் உறுதியாக உள்ளது ‘அண்ணாத்த’ படக்குழு.

இன்னும் ஒருசில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கியுள்ள நிலையில், அதையும் ரஜினி அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் முடிக்க திட்டமிட்டுள்ளது.