சென்னை,

றிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி இன்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக நிறுவனருமான அறிஞர் அண்ணாவின் 49வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

அதன் காரணமாக,  திமுக சார்பில்,  அண்ணா நினைவு தின பேரணியில் கலந்துகொள்ளுமாறு திமுக தொண்டர்களுக்க  அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக இன்று காலை முதலே திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் அண்ணா சமாதி உள்ள சென்னை மெரினா கடற்கரை பகுதியில் குவியத் தொடங்கினர்.

அதைத்தொடர்ந்து இன்று காலை சுமார் 9 மணி அளவில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அந்த பகுதிக்கு வருகை தந்தார். அதையடுத்து, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் இருந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி தொடங்கியது.

இந்த பேரணியில், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, ராஜா, தயாநிதி மாறன் உள்பட, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அண்ணா சதுக்கம் வரை அமைதிப் பேரணி நடத்தினர்.

சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்ற அவர்கள், ஏற்கெனவே, அண்ணா நினைவிடத்தில் காத்திருந்த பொதுச் செயலாளர் அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன் ஆகியோருடன் இணைந்து அண்ண சமாதியில்  மலர்வளையத்தை வைத்து அஞ்சலி செலுத்தினர்.