சென்னை: மொய்விருந்து நிகழ்வு பற்றி அண்ணாமலைக்கு தெரிய வாய்ப்பு இல்லை என அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறினார்.
பேராவூரணி தொகுதியின் திமுக எம்எல்ஏ அசோக் குமார், தனது பேரக்குழந்தைகளின் காதணி விழாவை முன்னிட்டு கடந்த 23ஆம் தேதி, பிரம்மாண்ட மொய் விருந்து நடத்தினார். விருந்தில் பங்கேற்றவர்கள் 1,000 ரூபாய் முதல் 5 லட்சம் வரை மொய் எழுதிச் சென்றனர். இதற்காக பணம் எண்ணும் இயந்திரத்துடன் 40 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 11 கோடி ரூபாய் மொய் பணம் வசூலாகி இருந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. ரூ.11 கோடி வரை மொய் எழுதும் வகையில் அந்தபகுதி மக்கள் லட்சாதிபதிகளா, கோடீஸ்வரர்களா என விமர்சனம் எழுந்தது.
இதுகுறித்து காட்டமாக அறிக்கை வெளியிட்ட மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, வாழ்வதற்கு வழியில்லாமல், பண முடையில் சிக்கித் தவிப்பவர்கள், வட்டிக்கு பணம் வாங்காமல் வாழ்விலே மீண்டு வர கடைசி வாய்ப்பு என்பது மொய் விருந்து நடத்துவர்கள் ஆனால், திமுக சட்டமன்ற உறுப்பினர், மொய் விருந்து போட்டு 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து, மக்களையும் அரசையும் முட்டாளாக்க நினைக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தன் சுய இலாபத்திற்காக, 100 ஆடுகள் மட்டன் குழம்பாக, குடல் கிரேவி, சிக்கன் ரோஸ்ட் என தடபுடலாக 8,000 பேருக்கும் மேலே விருந்து தூள் கிளப்ப, அசைவச் சாப்பாடும், சைவச்சாப்பாடும் பரிமாறியிருக்கிறார் திமுக எம்.எல்.ஏ. அசோக் குமார். மொய் வாங்குவதற்காக 40 கவுண்டர்கள், கட்டுக்கட்டாக வரும் பணத்தை, கவனமாக எண்ணிப் பார்க்க, பணம் எண்ணும் இயந்திரம், அதை உடனடியாக வங்கிக் கணக்கில் சேர்க்க, வங்கி அதிகாரிகள், என்று குட்டி ரிசர்வ் வங்கி போல மொய் வசூல் மையம் நடத்தப்பட்டுள்ளது.
மொய் விருந்துக்கு வந்தவர்கள் அனைவரும் ரூ.1,000-ல் தொடங்கி ரூ.5 லட்சம் வரை அவரவர் வசதிக்கேற்ப மொய் செய்துள்ளனர்…. இது சத்தியமா…சாத்தியமா…. அங்கே தான் நிக்கிறது திமுகவின் விஞ்ஞானபூர்வ ஊழல் திறமை.
2 இலட்சத்திற்கு மேல் காசோலைகளைத்தான் பயன்படுத்த வேண்டும். வீட்டில் அதிக கரன்சிக்களை வைப்பது குற்றம். வங்கியில் ரூ.50,000/க்கும் மேல் செலுத்த வருமானவரித்துறை கேள்வி கேட்கும். குவிந்திருக்கும் கருப்புப் பணம் வெள்ளையாக வேண்டும்…..
என்று சாமானிய மக்களுக்கு சொல்லுது சட்டம்…. ஆனா… அசோக் குமார் அடிச்சது, ஒரே கல்லில் அஞ்சாறு மாங்காய். சாப்பிட்ட ஊருக்காரனும் ஹாப்பியில், சாப்பிடா முடியாத கருப்புப் பணமும் ஜோப்பியில், இந்த விஞ்ஞானபூர்வ வித்தைகள் காட்டும் வித்தகத்தில், தலைமயையே விஞ்சும், கைதேர்ந்த திறமைசாலிகள் திமுகவினர். மக்களையும், அரசையும் முட்டாளாக நினைக்கும் இவர்களின் கூட்டுக் கொள்ளைகள், இப்போதுதான் வெளிச்சப்படுகிறது. மக்களுக்குப் புரியத் தொடங்கிவிட்டது. உண்மையான ஊழலற்ற தமிழகத்திற்கான விடியல் ஆட்சி, எப்போது வரும் என ஏக்கத்துடன், விருந்துகளையும், துலாபாரத்தையும், மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என சாடியிருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன், கடன் கொடுத்து ஒருவரை கை தூக்கிவிடும் ஒரு நல்லெண்ண நிகழ்வு பற்றி கர்நாடகாவில் இருந்து வந்த அண்ணாமலைக்கு தெரிய வாய்ப்பு இல்லை”. புதுக்கோட்டை பேராவூரணி பகுதிகளில் காலங்காலமாக நடைபெற்று வரும் மொய் விருந்தை பாஜக அண்ணாமலை கொச்சைப்படுத்துகிறார். வட்டியில்லா கடன் கொடுத்து, ஒருவரை கை தூக்கிவிடும் ஒரு நல்லெண்டட நிகழ்வு பற்றி கர்நாடகாவில் இருந்துவந்த அண்ணாமலைக்கு தெரிய வாய்ப்பு இல்லை என்று கூறினார்.