சென்னை: தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து, அதுகுறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என மாநில பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் பாஜக தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்டால் தலைவர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக கட்சி பணி செய்வேன். இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவதற்கு நேரம் கேட்டுள்ளேன் என கூறியவர், கர்நாடக பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால் மே 10 ஆம் தேதி வரை கட்சி பணிகளில் தீவிரமாக இருப்பேன் என்றார்.
மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சால் பாஜக கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவரது செயல், கட்சியின் மூத்த நிர்வாகிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பல தகவல்கள் பரவி வருகின்றன.
ஆனால், பாஜக உள்கட்சி விவகாரம் வெளியே கூறமுடியாது, நடக்காத ஒன்றை சிலர் சித்தரித்துள்ளனர் என்று நாராயணன் திருப்பதி விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த, துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என கூறியதுடன், தேர்தல் கூட்டணி குறித்து பாஜகவின் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். தமிழகத்தில் இதுவரை யாரும் தனித்துப் போட்டியிட்டது இல்லை: தனித்துப் போட்டியிடுவதாகவும் அறிவிக்க முடியாது என்று கூறினார்.
இந்த சலசலப்பு குறித்து டிவிட் பதிவிட்டுள்ள, பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி தமிழகத்துக்கு தேவை ஆட்சி மாற்றம் அல்ல, அரசியலில் மாற்றம். அந்த மாற்றத்தை உருவாக்க தான் தன் ஐபிஎஸ் பதவியை விட்டுட்டு தமிழகத்துக்கு வந்தவர் தலைவர் அண்ணாமலை. ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் கனவு. அரசியல் மாற்றத்துக்காகவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பணியாற்றி வருவதாகவும், ஊழலை ஓரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பதிவிட்டுள்ளார்.