சென்னை: வடமாநிலத்தவர்கள் விவகாரம் குறித்து திமுக உள்பட பலரை குற்றம் சாட்டி, சவால்விட்டு அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், ஏற்கனவே அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறையினர் அது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு வரவழைப்பது தொடர்பாக தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும், அண்ணாமலை மீது போடப்பட்டு உள்ள வழக்குகள் தொடர்பாக போலீசார் ஆலோசனை நடத்தி வருவதாகவும், இதுதொடர்பாக சட்ட நிபுணர்களின் ஆலோசனை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடமாநித்தவர்கள் விவகாரத்தில், தமிழ்நாட்டின் பெரும்பாலான கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன. தற்போதைய சலசலப்புக்கு பாஜக காரணம் என திமுக உள்பட அதன் ஆதரவு கட்சிகளும், திமுகதான் காரணம் என பாஜகவும் குற்றம் சாட்டி வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி பா.ஜ.க மாநில தலைவரை விமர்சித்து சில கருத்துக்களை பேசியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், “நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஆனால் இரட்டை வேடங்கள் போடுவது என்பது திமுகவினருக்கு இயல்பானது.
பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தமிழகம் அமைதிப்பூங்கா என்று, தொட்டிலையும் ஆட்டி வைக்கும் இரட்டைவேடம் திமுகவிற்கு கைவந்த கலை.
“இந்தி தெரியாது போடா” என்று முதல்வரின் மகன் டி-ஷர்ட் கலாச்சாரத்தை, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடங்கி வைக்க… விமான நிலையத்தில் என்னிடம் இந்தியில் பேசினார்கள் என்று முதல்வரின் தங்கை, திமுகவின் எம்பி ஒரு பொய்யான புகாரை வழங்கி… வடமாநிலத்தவருக்கு எதிரான வன்மத்தைத் தொடங்கிவைத்தார். தற்போது சமூகங்களில் உலவும் பல பொய்யான செய்திகளுக்கும் இவையெல்லாம் காரணங்களாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
முதல்வரின் குடும்பத்தினரால் தொடங்கி வைக்கப்பட்ட காழ்ப்புணர்ச்சியும், வன்மமும் தற்போது வட மாநிலத்தவர் மீது திரும்பி விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான், “வட மாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரச்சாரங்களுக்கு முடிவு கட்டுவாரா முதல்வர்?” என்று கேட்டிருந்தேன்.
அதனால்தான் பிரச்சனையை திசைதிருப்ப, இப்போது என்மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். முதலமைச்சரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், ஒரு சில வட இந்திய தலைவர்கள் கலந்து கொண்ட உடன், இந்திய தலைமை தாங்க திமுகவின் தலைமை கண்ட பகல் கனவை நினைத்து, எங்களுக்கெல்லாம் பரிதாபப்படத்தான் தோன்றியதே தவிர, பற்றி எரியவில்லை.
பாஜக மொழித் திணிப்பு செய்வதாக, குற்றப் பத்திரிக்கை வாசிக்கும் அவசர குடுக்கை ஆர் எஸ் பாரதி அவர்களே, அறுபதுகளில் இருந்து ஆட்சி கட்டிலில் பதவி சுகம் அனுபவித்த, திமுக செய்யாத தமிழ் மொழித் திணிப்பை, பள்ளிகளில் “தமிழை கட்டாயப் பாடம்” ஆக்கியதன் மூலம், நாங்கள் தமிழ் மொழித் திணிப்பை செய்திருக்கிறோம். மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மொழித் திணிப்பை செய்திருக்கிறது என்பது உண்மைதான்.
வெறுப்பையும் பகையையும் வெளிப்படுத்துவதாக என் மீது அவசர குடுக்கை ஆர்.எஸ் பாரதி வெளியிட்ட கூற்று ஒரு வகையில் சரிதான். திமுகவின் இரட்டை நிலைப்பாட்டின் மீது வெறுப்பும், அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி மீது பகையும், எனக்கும், நான் சார்ந்த இயக்கத்தினருக்கும் எப்போதும் உண்டு.
வட மாநிலங்களில் உள்ள சட்டமன்றங்களில் தமிழகத்திற்கு எதிரான கண்டனக் குரல்களை கண்ட பிறகு, எழுந்த அச்சத்தினால், பிள்ளையை கிள்ளிவிட்ட நீங்கள் தொட்டிலாட்ட முன் வந்திருக்கிறீர்கள். இரட்டை வேடம் அல்ல, நாடக திமுகவினர் இருபது வேடங்கள் கூடப் போடுவீர்கள்.
இப்படி, தமிழகத்தில் தொடங்கி வைக்கப்பட்ட வெறுப்பு அரசியலால், திருப்பூரில் விரும்பத்தகாத ஒரு சம்பவம் நடைபெற்ற போது, காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்காதது ஏன்?
காவல்துறை அதிகாரிகளுக்கும், திமுகவினருக்கும், தமிழக முதல்வருக்கும் இதில் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையிலே, காவல்துறையின் நடவடிக்கைகளை தாமதப்படுத்தியது யார்? என்ற விசாரணையை சிபிஐ தொடங்க வேண்டும்.
அடிக்கடி திருச்சிக்குச் செல்லும் தமிழகத்தின் டிஜிபி அவர்கள், திருப்பூருக்கு ஏன் நேரிலே சென்று விசாரிக்கவில்லை? திருப்பூரில் உளவுத்துறை என்ன செய்து கொண்டு இருந்தது? ஆகவே தமிழகக் காவல்துறையினர் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பதை சிபிஐ விசாரித்தால்தான் நாட்டிற்கு உண்மை நிலவரம் தெரியவரும்.
நாட்டில் பிரிவினையில்லாத நல்லிணக்கத்தையும், நாட்டுப்பற்றுடன் கூடிய தேச ஒற்றுமையையும், பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தும்” என குறிப்பிட்டுள்ளார்.
I understand DMK has filed cases against me for exposing their 7-decade propaganda against North Indian brothers.
So, here is the video of what they spoke, which was mentioned in my press release yesterday.
I challenge Fascist DMK to arrest me! pic.twitter.com/U3ZwbXmSSG
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 5, 2023
முன்னதாக அண்ணாமலை முதல்வர் ஸ்டாலின் உள்பட பலர் இந்தி குறித்து பேசியதை தொகுத்து வெளியிட்டிருந்தார். அதில், முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், ஹிந்தி பேசுபவர்களை தமிழகத்தில் வேலையில், நுழைப்பது மூலம் பாஜ., வை வளர்ப்பதற்கு ஒரு சூழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதற்கு இங்கு இருக்கும் பழனிசாமி கும்பல்கள் வேடிக்கை பார்க்கலாம். அதனை திமுகவோ தமிழக மக்களோ வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள் என அழுத்தம் திருத்தமாக சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
அமைச்சர் பொன்முடி பேசுகையில், ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும் என சொன்னார்கள். நம் ஊரு கோவையில் போய் பாருங்கள்..ஹிந்திகாரன் தான் பானி பூரி கடை வைத்திருக்கிறார்கள் என பேசுகிறார். அமைச்சர் நேரு பேசுகையில், ரயில் நிலையங்களில் பார்த்தால் வட மாநிலத்தவர்கள் அதிக பேர் வேலை பார்க்கிறார்கள் என வட மாநில தொழிலாளர்கள் பற்றி கிண்டலாக பேசுகிறார்.
வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி பேசுகையில், தமிழகத்தில் உள்ள வணிகர்கள் மட்டுமே மாநிலம் முழுவதும் வணிகம் செய்ய வேண்டும். வெளி நாடுகளிலிருந்து தமிழகத்தில் வணிகம் செய்ய அனுமதிக்கக் கூடாது. வட மாநிலத்தவர் தமிழகத்தில் செய்யும் வணிகத்தில் வரி முறைகேடு செய்கிறார் என பேசுகிறார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் பேசுகையில், தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். வட மாநில ஆட்களை இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளது. அவர்களுக்கு ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை வழங்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்த கூடும் எனக் கூறுகிறார்.
இந்த வீடியோவுடன் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரசாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன். திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும் என அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
இந்த நிலையில், அண்ணாமலையை கைது செய்ய திமுக அரசு காய் நகர்த்தி வருகிறது. அண்ணாமலை அறிக்கை வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாகவும், அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை மண்ணடியைச் சேர்ந்த குமரன் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
அதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் அண்ணாமலை மீது கலகத்தை தூண்டும் வகையில் பேசுவது, பேச்சால் அல்லது எழுத்தால் உணர்ச்சியை தூண்டுதல், அறிக்கை மூலமாக குறிப்பிட்ட நபர் மீது குற்றம் சாட்டி பிரிவினையை தூண்டுதல், உள்நோக்கத்துடன் செயல்படுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இ
தனை தொடர்ந்து அண்ணாமலை டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்” என்று தமிழக அரசுக்கு சவால் விடுத்தார்.
இதையடுத்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் தொடங்கி வைக்கப்பட்ட வெறுப்பு அரசியலால், திருப்பூரில் விரும்பத்தகாத ஒரு சம்பவம் நடைபெற்ற போது, காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? காவல்துறை அதிகாரிகளுக்கும், திமுகவினருக்கும், தமிழக முதல்வருக்கும் இதில் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையிலே, காவல்துறையின் நடவடிக்கைகளை தாமதப்படுத்தியது யார்? என்ற விசாரணையை சிபிஐ தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
முன்னதாக, வடமாநிலத்தவர் விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட 5 பேர்மீது தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. திருப்பூரில் 3 வழக்குகள், கிருஷ்ணகிரியில் ஒரு வழக்கு, தூத்துக்குடியில் ஒரு வழக்கு என மொத்தம் 5 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதற்காக தனிப்படை போலீசார் டெல்லி விரைந்துள்ளனர். மேலும் பீகாருக்கும் தனிப்படை போலீசார் செல்கிறார்கள். இந்த நிலையில் அண்ணாமலை மீது போடப்பட்டு உள்ள வழக்குகள் தொடர்பாக போலீசார் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்க இருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே பாஜக, அதிமுக போன்ற எதிர்க்கட்சிகள், திமுக உள்பட பலர்மீது கொடுத்த புகார்கள்மீது தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதியவோ, நடவடிக்கை எடுக்கவோ முன்வராத நிலையில், அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு காவல்துறை முயற்சித்து வருவது தேசிய அரசியலில் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.