சென்னை: காவல்துறை விசாரணைக்கு உட்படத்தப்பட்ட அண்ணா பல்கலை மாணவி  பாலியல் குற்றவாளியான ஞானசேகரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் வடசென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

முன்னதாக ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான விசாரணைக்குழு ஞானசேகரனுடன் தொடர்பில் இருந்த சில போலீசாரிடம் விசாரணை நடத்த தொடங்கி உள்ள நிலையில்,  ஞானசேகரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புகழ்பெற்ற சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  பொறியியல் மாணவி ஞானசேகரன் என்ற திமுக அனுதாபியால் மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். மேலும், அதை வீடியோ எடுத்த அந்த நபர், மேலும் ஒருவரிடம் அந்த மாணவி பழக நிர்பந்தித்துள்ளார். இதுகுறித்து மாணவி கொடுத்த புகாரின்பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த விவகாரத்தில், காவல்துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் மீது பல்வேறு சந்தேகங்கள் கிளப்பப்பட்டு வருகிறது. மாணவியின் புகார் தொடர்பான எஃப்ஐஆர் வெளியானது, காவல்துறை முதலில் கோட்டூர்புரத்தை  ஞானசேகரனை புகாரின் பேரில்  கைது செய்து, கடமைக்காக விசாரணை செய்து விட்டு, அவரை  விடுவித்தது, பின்னர் கடும் எதிர்ப்பு எழுந்த பிறகு மீண்டும் கைது செய்தது, இதுதொடர்பாக காவல்ஆணையர் அருண் செய்தியாளர்களை சந்தித்தது போன்றவை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. நீதிமன்றமும் கடுமையாக கண்டித்துள்ளது. காவல்ஆணையர் அருண்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.  மேலும் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ஞானசேகரனை காவல்துறையினர் கை, காலை உடைத்து கட்டுப்போடப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டனர். அவர் தப்ப முயன்றபோது கிழே விழுந்ததால் காயம் என கூறப்பட்டது. இதையடுத்து, 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.  புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஞானசேகரனை, கடந்த வாரம், 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க காவல்துறை அவரை நீதிமன்றம் மூலம் விசாரணைக்கு எடுத்து விசாரணை நடத்தியது.

ஞானசேகரன் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால், அவரை நேற்று அண்ணா நகர் துணை கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணையை கடுமையாக்கினர்.  அப்போது, தன்னுடன் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்த, கோட்டூர்புரம் மற்றும் அபிராமபுரம் போலீசார் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஞானசேகரனுடன்  அபிராமபுரம் காவல் நிலைய எழுத்தர் ஒருவர் நெருங்கி பழகியதும் தெரிய வந்துள்ளது. இதனால், பல்கலை மாணவி வழக்கில், ஞானசேகரன் மற்றும் அவருக்கு துணைபோன போலீசார் உள்பட மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் விசாரணையின்போது, ஞானசேகரன்  போலீஸ் சீருடை மற்றும் வாக்கி டாக்கி சகிதமாக, அண்ணா பல்கலை வளாகத்தில் சுற்றியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஞானசேகரனிடம் விசாரணை நடத்திய போலீசார், அவனுக்கு உடந்தையாக செயல்பட்ட   போலீசாரிடமும் விசாரணையை துவக்கி உள்ளனர்.

இந்த நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஞானசேகரனுக்கு இன்று அதிகாலை திடீரென  வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், சிறப்பு புலனாய்வு குழுவில் இடம் பெற்றுள்ள ஆவடி துணை கமிஷனர் அய்மன் ஜமால், சேலம் துணை கமிஷனர் பிருந்தா ஆகியோரும் தனித்தனியே, ஞானசேகரனிடம் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.